Trump Vs Netanyahu: சிறப்பான சம்பவம் காத்திருக்கு, செஞ்சு முடிப்போம்.! நெதன்யாகுவை சந்திப்பதற்கு முன் ட்ரம்ப் பதிவு
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கெண்டு வரும் வகையில், இன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார் ட்ரம்ப். அதற்கு முன்னதாக, சிறப்பான விஷயங்களுக்காக அனைவரும் ஒன்றுகூடுகிறோம் என பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட 21 அம்ச திட்டத்தை ட்ரம்ப் பகிர்ந்து கொண்ட நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் நெதன்யாகு-டிரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், சிறப்பான விஷயங்கள் நடக்க இருப்பதாகவும், அற்காக அனைவரும் ஒன்றுகூடுவதாகவும் தெரிவித்துள்ளதோடு, செய்து முடிப்போம் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான லட்சியத் திட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது என்று அமெரிக்கா கூறும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் வெள்ளை மாளிகையில் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்த உள்ளார்.
ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான 4-வது சந்திப்பு இதுவாகும். கடந்த வாரம் நியூயார்க்கில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட 21 அம்ச திட்டத்தை அமெரிக்கத் அதிபர் ட்ரம்ப் மற்ற பிராந்தியத் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்ட நிலையில், இந்த சந்திப்பு நிகழ்கிறது.
நெதன்யாகு உடனான சந்திப்பை முன்னிட்டு ட்ரம்ப் பதிவு
நெதன்யாகு உடனான சந்திப்பு நடக்க உள்ள நிலையில், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், "மத்திய கிழக்கில் மகத்துவத்திற்கான உண்மையான வாய்ப்பு நமக்கு உள்ளது," என்று கூறியுள்ளார். மேலும், "அனைவரும் முதல் முறையாக ஒரு சிறப்பு நிகழ்விற்காக தயாராக உள்ளனர். நாங்கள் அதைச் செய்து முடிப்போம்." என்றும் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ட்ரம்ப் வழங்கியுள்ள திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என இஸ்ரேலும், ஹமாசும் தெரிவித்துள்ளன. திங்கட் கிழமை, அதாவது இன்று நடைபெறும் சந்திப்பிற்கு(ட்ரம்ப்-நெதன்யாகு) பின்னரே இத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. மறுபுறம், ட்ரம்ப் அளித்த திட்டத்தை இன்னும் பார்க்கவே இல்லை என ஹமாஸ் கூறியுள்ளது.
ட்ரம்ப் அளித்த திட்டம் என்ன சொல்கிறது.?
ட்ரம்ப் அளித்த திட்டத்தின் கீழ், ஹமாஸ் 48 உயிருள்ள மற்றும் இறந்த பணயக் கைதிகளையும் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்கும் என்றும், இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, அதன் துருப்புக்கள் படிப்படியாக பின்வாங்கும் என்றும் தெரிவிக்கின்றன. பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் என்றும், காசாவிற்குள் கணிசமான அளவில் உதவிகளை அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
அதன் பங்கிற்கு, ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும். மேலும், பாலஸ்தீன பிரதேசத்தை நிர்வகிப்பதில் எந்தப் பங்கும் இருக்காது. ஒரு இடைக்கால நிர்வாகம் நிறுவப்படும். மேலும், பள்ளிகள் மற்றும் மசூதிகள் அமைக்கப்படும்.
இதனிடையே, இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த விவரங்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ மறுத்துவிட்டனர்.
ஹமாஸின் மீதமுள்ள ராணுவ கோட்டைகளை அகற்றும் நோக்கத்துடன், இஸ்ரேல் காசா நகரத்தின் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன. நகரத்தின் 1 மில்லியன் குடியிருப்பாளர்களில் 7,00,000 பேரை இஸ்ரேலியப் படைகள் விரட்டியடித்துள்ளன. மேலும், ஹமாஸ் உபகரணங்கள் இருப்பதாகக் கூறும் உயரமான கட்டிடங்களையும், ஹமாஸ் போராளிகள் செயல்படும் சுரங்கப் பாதைகளையும் அழித்துள்ளன.
நேற்று மாலை, இஸ்ரேலிய தரைப்படைகள் காசா நகரத்திற்குள் ஆழமாக நுழைந்து, நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான மருத்துவமனையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சமூக ஊடகக் காட்சிகள் தெரிவிக்கின்றன.






















