Afghanistan News: ஆஃப்கானில் சிறைபிடிக்கப்பட்டார்களா இந்தியர்கள்? - மறுத்த தலிபான்
மத்திய அரசு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாத நிலையில் தலிபான்களே தற்போது அந்தத் தகவல் உண்மையில்லை என மறுத்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானை அண்மையில் கைப்பற்றிய தலிபான்கள் அங்கே இந்தியர்கள் 150 பேரைத் தன் பிடியில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியானது. காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்கள் பலரைத் தனது பிடியில் தலிபான்கள் வைத்திருப்பதாகத் தகவல் வந்தது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஆஃப்கானிஸ்தானில் தலிபான் பிடியிலிருந்து தப்பியோட முயற்சித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாத நிலையில் தலிபான்களே தற்போது அந்தத் தகவல் உண்மையில்லை என மறுத்துள்ளனர்.
முன்னதாக நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் நகரத்தில் இருந்த இந்தியத் தூதரகங்களில் தலிபான்கள் சோதனை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரத்திலும் இதே போன்ற சோதனை நடந்துள்ளது. கந்தஹாரில் இருந்து இந்தியத் தூதரகத்தின் அலமாரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இரு நகரங்களில் இருந்த தூதரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் தாலிபான்கள் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், ஜலாலாபாத், காபுல் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் வந்த செய்திகளின் படி, காபுல் நகரத்தைச் சுமார் 6 ஆயிரம் பேருடன் கூடிய ஹக்கானி படை கைப்பற்றியது. ஹக்கானி படையின் தலைவரான அனஸ் ஹக்கானி, தாலிபான் குழுவின் துணைத் தலைவர் சிராஜுதீன் ஹக்கானியின் சகோதரர் ஆவார்.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், நல்லிணக்கத்திற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் அப்துல்லாஹ் அப்துல்லாஹ், ஹெஸ்ப் ஏ இஸ்லாமி அமைப்பின் வழிகாட்டி குல்புதீன் ஹெத்க்மத்யார் ஆகியோரைச் சந்தித்துள்ளார் அனஸ் ஹக்கானி. ஹமீத் கர்சாய், அப்துல்லாஹ் ஆகியோர் தாலிபான்களால் வெளியில் சுதந்திரமாக நடமாடத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
ஒரு மேடை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஹமீத் கர்சாய், அப்துல்லாஹ் ஆகியோர் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதருக்கு அதிகாரத்தை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும், தாலிபான்களின் தலைமைக் குழு அமைந்திருக்கும் க்வெட்டா நகரத்தில் இருந்து சிராஜுதீன் ஹக்கானி இதற்கான உத்தரவுகளைப் பிறப்பிப்பார் எனக் கூறப்படுகிறது.
கந்தஹாரில் இருந்து வெளிவந்த தகவல்களின்படி, இந்தியத் தூதரகத்தின் பூட்டை உடைத்து தாலிபான்கள் சோதனை செய்துள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசின் வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஹெராத் நகரத்தின் இந்தியத் தூதரக வளாகத்திற்குள் நுழைந்த தாலிபான்கள் வாகனங்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். தூதரகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழையவில்லை.
காபுல் நகரத்தைத் தாலிபான்களின் ஹக்கானி குழு கைப்பற்றியுள்ள நிலையில், மற்றொரு குழுவின் தலைவரான முல்லா யாகூப் கந்தஹாரில் தனது அதிகாரத்தை நிறுவத் திட்டமிட்டு வருகிறார். இவர் தாலிபான் ராணுவ ஆணையத்தின் மறைந்த தலைவர் முல்லா ஒமரின் மகன். கந்தஹார் பஷ்டூன் பழங்குடியினரின் பாரம்பரியமான நகரம் என்பதால் இதனை முல்லா யாகூப் அடையத் திட்டமிட்டுள்ளார். இதே கந்தஹாரில் முல்லா யாகூபின் தந்தை, கடந்த 1996-ஆம் ஆண்டு தாலிபான் ஆட்சியில் தலைவராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாலிபான் தலைமைக் குழுவுக்குள் அரசை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் ஏ முகமது என்ற மற்றொரு ஆயுதம் தாங்கிய அமைப்பு, தெற்கு ஆப்கானிஸ்தானில் தங்களுக்கென்று ஒரு பகுதியைக் கேட்டு வருகின்றனர். தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதால், ராவல்பிண்டியில் ஜெய்ஷ் ஏ முகமது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முதலான நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருவதைக் கவனமாக கண்காணித்து வரும் சூழலில், தலிபான்களுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைவர் நிக் கார்டர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் தாலிபான்களின் தோஹா சந்திப்பின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பிற நாட்டு ராணுவங்கள் வெளியேறுவதில் முக்கிய பங்காற்றியவர்