Afghan Beauty Salon: தலிபான் அரசின் புதிய அடக்குமுறை… ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை!
பெண்கள் அழகு நிலையங்கள் செயல்படுவதை தடுக்கும் விதமாக பெண்கள் அங்கு வேலை செய்ய கூடாது என்றும், பெண்கள் சேவைக்காக அங்கு செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான சமீபத்திய அடியாக, இஸ்லாமிய எமிரேட்ஸ் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு தடை விதித்து வாய்மொழி ஆணையை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள் மீதான அடக்குமுறை குறித்த கேள்வி பெரிதாக எழுந்தது. ஆனால் ஐநா - வில் பெண்கள் உரிமையில் முக்கியத்துவம் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக அதன் அடக்குமுறைகளை சட்டங்களாக கட்டவிழ்த்து விட துவங்கியது. பெண்கள் உடையில் தொடங்கிய இந்த அடக்குமுறை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயிலத் தடை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் பெண்கள் பணிபுரியத் தடை, பெண்கள் பெண் மருத்துவரிடம் மட்டுமே செல்ல வேண்டும், பெண்கள் மருத்துவம் படிக்க தடை, என தடைகள் நீண்டுகொண்டே போகின்றன.
பெண்கள் அழகு நிலையங்கள்
அதிகாரப்பூர்வ தடைகள் என்பதை தாண்டி, இயற்கையாகவே குழந்தை திருமணம், பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாமை, கற்ப கால மரணம் ஆகியவை அதிகரித்துள்ளன. இதனை எல்லாம் தாலிபன் அரசு விதைத்த புதிய சட்டங்கள் மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்தன. தற்போது புதிய அடக்குமுறையாக, பெண்கள் அழகு நிலையங்கள் செயல்படுவதை தடுக்கும் விதமாக பெண்கள் அங்கு வேலை செய்ய கூடாது என்றும், பெண்கள் சேவைக்காக அங்கு செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒடுக்குமுறை தீவிர இஸ்லாமியக் குழுவால் ஆளப்படும் நாட்டில் பெண்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்துகிறது.
தடைகளின் பாதிப்புகள்
தலிபானின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியது மற்றும் அதைச் செயல்படுத்த காபூல் நகராட்சிக்கு அறிவுறுத்தியது. இதன் விளைவாக பல சலூன் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என்று TOLOnews திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. தலிபானின் முடிவு ஏற்கனவே மோசமான பொருளாதார நிலைமையை கொண்டுவந்துள்ளதால் மேலும் பெரிய கவலைகளை எழுப்பியுள்ளது. பல ஆண்கள் வேலையில்லாமல் இருப்பதால், பெண்கள் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக அழகு நிலையங்களில் பணிபுரிகின்றனர். இந்த தடையானது இப்போது அவர்களது வாழ்வாதாரமாக இருந்த, சம்பாதிக்கும் வழியை இல்லாமல் செய்துள்ளது.
தொடரும் தடைகள்
அழகு நிலைய தடைக்கு முன்னர், தாலிபான் அரசாங்கம் பெண்களின் கல்வி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளுக்கு செல்லுதல் போன்ற பொது இடங்களை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் உட்பட பல தடைகளை அமல்படுதியுள்ளது. ஏற்கனவே இந்த தடைகளை எதிர்த்து பல குரல்கள் கிளம்பிய நிலையில், தற்போது மீண்டும் வந்துள்ள ஒரு அடக்குமுறை சட்டத்திற்கு எதிராக பல குரல்கள் எழுந்துள்ளன. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து உலகளாவிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆகஸ்ட் 2021 இல் தலிபான் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் தாக்கங்களுடன் ஆப்கானியர்கள் போராடுவதால், இந்த நிலை தொடர்ந்து வருகிறது.