Volodymyr Zelensky: உடல் மண்ணுக்கு உயிர் உக்ரைனுக்கு.. உலகம் உற்றுநோக்கும் உக்ரைன் அதிபர் குறித்து சில தகவல்கள்..
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பத்திரமாக மீட்க அமெரிக்க உள்ளிட்ட பலநாடுகள் முன்வந்துள்ளன. இருந்தாலும், இந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் புறநகர் பகுதிகள் வரை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பத்திரமாக மீட்க அமெரிக்க உள்ளிட்ட பலநாடுகள் முன்வந்துள்ளன. இருந்தாலும், இந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிராளிகள் நெருங்கி போரிடும் தருணத்தில் கூட, தனது நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அறநெறியை உலக மக்கள் பாராட்டி வருகின்றனர்.
புறநானூற்றில், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி தன் மகன் மாண்டான் என்று கூறக் கேட்ட, அங்கு விரைந்த அவன் வயது முதிர்ந்த தாய், " மண்டு அமர்க்கு (போர்க்களத்தில்) உடைந்தனன் (தோற்றோடினான்) ஆயின் உண்டஎன் முலை (மார்பை)அறுத்திடுவேன்" என்று கண்கள் சிவக்க கூறுவாள். ஆனால், புறுமுதுகு காட்டி ஓடாமல், சிதைந்து துண்டு துண்டாக விழுப்புண் பட்டு தன் மகன் கிடப்பதை கண்டதும் பெற்றெடுத்த பொழுதைவிட மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள்.
செங்களந் (குருதியால் சிவந்த போர்க்களம்) துழவுவோள் (தேடுகின்றவள்) சிதைந்துவே றாகிய படுமகன் (விழுப்புண் பட்டு) கிடக்கை காணூஉ (கண்டது) ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே (ஈன்ற பொழுதை விட மகிழ்ச்சி கொண்டாள்)
ஓலோவ்டிமீர் ஜெலன்ஸ்கி பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.
ஜெலன்ஸ்கி ஒரு ரஷ்ய மொழி பேசும் யூதர் . அரசியலுக்கு முன்பாக, பெருமளவில் தொலைக்காட்சி நிகழ்சிகளில் வரும் மிகவும் பரிச்சயமான நகைச்சுவை நடிகராக மட்டுமே இருந்தார் .
இவர், சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் அந்தத் துறையில் பணியாற்றவே இல்லை.
இவர் நடிப்பில் வெளியான, 'மக்களின் சேவகன்' (Servant of the People)' என்ற தொலைக்காட்சி தொடர் மிகவும் பிரபலமானது. இந்த தொடரில், அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்நாட்டின் அதிபராக உயரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற உக்ரேன் அதிபர் தேர்தலில், இவர் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் தற்செயலான நிகழ்வாகும். தி ஆக்சிடெண்டல் பிரசிடெண்ட் என்றும் கூட சொல்வார்கள். இவரைப் பற்றி பொது செல்வாக்கு கூட மக்களிடம் அதிகமாக காணப்படவில்லை. ஆனால், தீவிர பிரச்சாரத்தின் மூலம் தனது நிலையை தலைகீழாக மாற்றிவிட்டார்.
தனது தேர்தல் பரப்புரையில், நாட்டுக்குள் ஆக்கிரமிக்க நடக்கும் எந்த முயற்சிகளையும் உக்ரைன் உறுதியாக எதிர்க்கும் என்றும், ரஷ்யாவுடான மோதலை போக்கை முடிவுக்கு கொண்டு வர பாடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.
2019 தேர்தலில், 73% வாக்குகள் பெற்று ஜெலன்ஸ்கி வெற்றி பெற்றார். அதன்பின், நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அவரது “மக்கள் சேவகன் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.
ஜெலன்ஸ்கி ஆட்சியின் மீது ஊழல் மற்றும் பல பொதுவான புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக, வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் இவர் முதலீடு செய்திருப்பபதாக கூறப்பட்டது. 'பண்டோரா பேப்பர்ஸ்' ஆவணக் கசிவில் இவரது பெயரும், இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
பொழுதுபோக்குத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால், உக்ரைன் நாட்டின் 'ட்ரம்ப்' என்ற அடைமொழியும் இவருக்கு உண்டு.