Japan Earthquake: ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இஸூ தீவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை..
ஜப்பானின் இஸூ தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள இஸூ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
#Japan experienced 6.6 magnitude earthquake in western Pacific Ocean. Meteorological agency of Japan warns of possible aftershocks and urged the people to be on alert for the next week; issues #Tsunami advisory asking people in coastal areas to retreat to higher ground.
— All India Radio News (@airnewsalerts) October 5, 2023
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இஸூ பகுதியில் உள்ள டொரிஷிமா அருகே காலை 11 மணிக்கு ஏற்பட்டதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை வழங்கியுள்ளது. மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இஸூ தீவுகளில் குறைந்தபட்சம் 30 செ.மீ உயரம் கொண்ட சுனாமி அலைகள் கணிக்கப்பட்டுள்ளது. முதலில் டோக்கியோவின் தெற்கே அமைந்துள்ள தீவு பகுதியில் 1 மீட்டர் வரையிலான சுனாமி அலைகள் கணிக்கப்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்ட சற்று நேராத்திலேயே அது திரும்பப் பெறப்பட்டது. கடலோர மற்றும் ஆற்று படுக்கை அருகே இருக்கும் மக்கள் உயர்வான பகுதியை நோக்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை தொடர்பாக வானியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “ 1 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி அலை என்பது பெரிய. விஷயமாக இல்லை என்றாலும், இதன் தாக்கம் மிகவும் மோசமானதாக இருக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹச்சிஜோ-ஜிமாவில் காலை 11:50 மணிக்கும், இசு ஓஷிமாவில் நண்பகலிலும் சுனாமி அலை இடைவெளி விட்டு, இஸூ தீவுகளில் வரும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஹச்சிஜோ-ஜிமாவில் (யானே) மதியம் 12:17 மணிக்கு 30 செ.மீ உயரம் கொண்ட சுனாமி அலை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இருப்பினும் மற்ற இடங்களில் இது அதிகமாக இருந்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட 10% முதல் 20% வரை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் கூறுப்படி, திங்கள்கிழமை தொடங்கி கடந்த வாரம் முழுவதும் மேற்கு பசிபிக் பெருங்கடலின் அதே பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வந்தது என்றும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது. இதுவரை, இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக அசாதாரண எரிமலை செயல்பாடு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மோசமான வானிலை காரணமாக இதனை உறுதி செய்ய முடியவில்லை. கடந்த வாரத்தில், ஜப்பான் கடலோரக் காவல்படையின் வான்வழி அவதானிப்புகளும் எரிமலை தொடர்பான அசாதாரண செயல்பாடு எதையும் காட்டவில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு டொரிஷிமா தீவுக்கு அருகில் இதே அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் 16 செ.மீ உயர சுனாமி மியாகே-ஜிமாவை தாக்கியது. 2022 டோங்கா-ஹுங்கா ஹாபாய் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமிக்குப் பிறகு இஸூ தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.