மியான்மரில் சிக்கித்தவிக்கும் 300 இந்தியர்கள்.. தப்பிக்க நினைத்தால் எலக்ட்ரிக் ஷாக்: நடந்தது என்ன?
தாய்லாந்தில் ஐடி வேலை இருப்பதாக ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட 300 இந்தியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டு அங்கு கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
தாய்லாந்தில் ஐடி வேலை இருப்பதாக ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட 300 இந்தியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டு அங்கு கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள அவர்கள் சட்டவிரோத சைபர் க்ரைம் குற்றங்களைச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றனர். அவ்வாறு செய்ய மறுத்தார் அவர்கள் எலக்ட்ரிக் ஷாக் போன்ற பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மியான்மாரின் தென் கிழக்குப் பகுதியான காயின் நகரில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
கணினியில் கைதேர்த்த இந்திய இளைஞர்களைக் குறிவைத்த சர்வதேச சட்டவிரோத கும்பல்கள் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை இருப்பதாகக் கூறி வலையில் சிக்கவைத்துள்ளது. அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 50 இளைஞர்கள் ஒரு வீடியோ மூலம் மத்திய மற்றும் தமிழக அரசுகளிடம் உடனடி உதவி கோரியிருந்தனர். இதன் மூலமே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த வீடியோவில் அவர்கள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். அவ்வாறு செய்யாவிட்டால் துன்புறுத்துகின்றனர். சட்ட விரோத வேலைகளைச் செய்யச் சொல்கின்றனர்.
இந்திய தூதரகம் நடவடிக்கை
யங்கூனில் உள்ள இந்தியத் தூதரகம் மியான்மர் அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. 300 பேர் சிக்கியுள்ளதாக அறியப்படும் பகுதி கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் பகுதி என்பதால் மீட்புப் பணிகளில் சற்று சிக்கல் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மியாவாடி பகுதியில் இருந்து 30 இந்தியர்களை தூதரகம் மீட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு வேலையா? உஷாராக இருங்கள்:
கடந்த ஜூலை 5-ஆம் தேதி இந்திய அரசாங்கம் போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டும் என்று எச்சரித்திருந்தது. அப்போது வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் சமீப காலமாக சில ஐடி நிறுவனங்கள் டிஜிட்டல் ஸ்காமிங்கில் ஈடுபடுவதை அறிந்தோம். மியன்மரின் கிழக்குப் பகுதிகளில் இருந்து இயங்கும் இந்த ஐடி கம்பெனிகள் இந்தியர்களை குறிவைத்து வலையில் சிக்கவைத்து பின்னர் அவர்களை கொத்தடிமைகளாக ஆக்கி சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்துகின்றன. அதனால் உஷாராக இருங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்கும் வேலை தேடி அலைந்து திரிவோர் அவல நிலை எழுத முடியாத துயரமாகும். இந்தப் பரிதாபகரமான நிலையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் சட்டவிரோத செயலில் சில கும்பல்கள் "வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகமைகளாக" செயல்பட்டு வருகின்றன. இதில் பணம் கொடுத்து ஏமாந்து விட்ட, ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி புகார் கொடுத்துள்ளனர். ஆனால் குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என உறுதியளித்த மத்திய பாஜக அரசு, நடைமுறையில் ஏமாற்றி விட்டதால், தொழிலாளர்கள் அயல்நாடுகளில் அவதிப்படும் கொடுமை ஏற்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.