Global Competitiveness Index: ஆளுநர் ரவி சொன்னது உண்மையா? உலக போட்டித்திறன் தரவரிசையில் இந்தியாவிற்கு எந்த இடம்?
உலக நாடுகளின் போட்டித்திறன் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி, இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் போட்டித்திறன் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி, இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டித் திறன் தொடர்பான ஆய்வு:
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் "உலக போட்டித்திறன் மையம்" (WCC), தனது வருடாந்திர போட்டித்திறன் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 64 நாடுகள் இந்த தரவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் இந்த ஆய்வில், டென்மார்க், அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றை தொடர்ந்து நெதர்லாந்து, தைவான், ஹாங்காங், சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், அடுத்தடுத்த இடங்களை பிடித்து முதல் 10 இடங்களை வசப்படுத்தியுள்ளன.
அயர்லாந்தின் வளர்ச்சி:
கடந்த தரவரிசை பட்டியலில் 11வது இடத்தில் இருந்த அயர்லாந்து 9 இடங்கள் முன்னேறி தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. திறமையான பணியாளர்கள், உயர் கல்வி பெறுதல், கொள்கை நிலைத்தன்மை, எதிர்காலத்தை கணித்து செயல்படுதல், போட்டி வரி விதிப்பு மற்றும் வணிக நட்பு சூழல் ஆகிய காரணிகளால் அயர்லாந்து இந்த பட்டியலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏழாவது இடத்திலிருந்து அயர்லாந்து தனது செயல்திறனுக்காக இந்த முறை முதலிடத்தை பிடித்துள்ளது.
சரிந்த சிங்கப்பூர்:
இந்த பட்டியலில் சிங்கப்பூர் ஒரு இடம் சரிந்து, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் முதல் இடத்தில் இருந்த அந்நாடு, 2021ல் 5வது இடத்தைப் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு 3ம் இடத்திற்கு முன்னேறியிருந்த நிலையில் இந்த முறை சரிந்துள்ளது. இருப்பினும், சிங்கப்பூர், வேலைவாய்ப்பில் 2ம் இடத்தையும், சர்வதேச முதலீடுகளில் 4வது இடத்தையும், உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியா, மூன்று இடங்கள் சரிந்து, 40வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 2019-2021 காலகட்டங்களில் தொடர்ச்சியாக 43வது இடத்திலிருந்ததை விட தற்போது 3 இடங்களில் முன்னேற்யுள்ளது. இந்திய அரசு செயல்திறனில் மேம்பட்ட நாடாக இருக்கிறது. குறிப்பாக, பரிமாற்ற விகித ஸ்திரத்தன்மை, இழப்பீட்டு நிலைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஆகியவை இந்தியாவுக்கு அதிக புள்ளிகளை பெற்று தந்துள்ளன. ஆனால் வணிக செயல்திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார செயல்திறன், பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் மற்ற நாடுகளை விட இந்தியா சற்றே பின்தங்கி உள்ளது.
ஆளுநர் ரவியின் பேச்சு:
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் “இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருக்கின்றனர். பணியமர்த்தும்போது பட்டப்படிப்பை விட தனித்திறனையே தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன. தமிழகம் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், தொழில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக கேட்டபோது தொழிலதிபர்கள் அதிர்ச்சி தரும் பதிலை தருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற பதிலே வருகிறது. பொறியியல் படித்த 80 முதல் 90 சதவிகித மாணவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறுகிறார்கள். இளங்கலை பட்டம் முடித்த 70% பேருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.