மலை நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து! எண்ணெய் சிந்தி தீப்பிடித்த பல வாகனங்கள்…19 பேர் பலி!
"சலாங் சுரங்கப்பாதையில் ஒரு எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து அதிலிருந்து கீழே சிந்திய எண்ணெய் தீப்பிடித்ததை தொடர்ந்து, பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது" என்று ஹமிதுல்லா மிஸ்பா கூறினார்.
ஆப்கானிஸ்தானின் உயரமான சலாங் கணவாயில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து தீப்பிடித்ததில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து தீவிபத்து
காபூலின் வடக்கே உள்ள பர்வான் மாகாணத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மலைப்பாதையின் இருபுறமும் பயணித்த பயணிகள் இந்த விபத்தில் சிக்கித் தவித்தனர். இந்த சம்பவத்தில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ள நிலையில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பர்வான் கவர்னரின் செய்தித் தொடர்பாளர் ஹெக்மத்துல்லா ஷமிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "சலாங் சுரங்கப்பாதையில் ஒரு எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து அதிலிருந்து கீழே சிந்திய எண்ணெய் தீப்பிடித்ததை தொடர்ந்து, பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது" என்று பொதுப்பணி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹமிதுல்லா மிஸ்பா AFP இடம் கூறினார்.
அடையாளம் காண்பது கடினமாக உள்ளது
பர்வானில் உள்ள மூத்த சுகாதார அதிகாரி அப்துல்லா ஆப்கான் மால், இறந்தவர்களில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் மோசமாக எறிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். "இறந்தவர்களில் யார் ஆண், யார் பெண் என்பதை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருந்தது," என்று அவர் கூறினார். ஹெலிகாப்டர்களில் சென்றுள்ள மீட்புக் குழுக்கள் தளத்தில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சலாங் கணவாய்
உலகின் மிக உயரமான மலை நெடுஞ்சாலைகளில் ஒன்றான சலாங் கணவாய், 50களில் சோவியத் கால நிபுணர்களால் கட்டப்பட்டது. இதன் உயரம் சுமார் 3,650 மீட்டர்கள் (12,000 அடி), மேலும் இது 2.6-கிலோமீட்டர் சுரங்கப்பாதையை உள்ளடக்கிய மிக பிரம்மாண்டமான கட்டுமானம் ஆகும். தலைநகர் காபூலை வடக்கே இணைக்கும் இந்து குஷ் மலைத்தொடர் வழியாக இந்தக் கணவாய் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலை கட்டுமான துறையில் உள்ள பலரே வியந்து பார்க்கும் ஒன்றாக திகழ்ந்து வந்தது.
பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
ஒரு மிகப்பெரிய பொறியியல் சாதனையாகப் போற்றப்படும் சலாங் கணவாய், குளிர்காலத்தில் விபத்துக்கள், கடுமையான பனிப்பொழிவுகள் மற்றும் பனிச்சரிவுகள் காரணமாக அடிக்கடி பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்வளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இருந்தும் இப்படி ஒரு கோரா விபத்து நடைபெற்று இருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 2010 இல், சலாங் கணவாயில் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக 150 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.