Gun shoot in US: 14 குழந்தைகளை சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞர்.. அமெரிக்காவில் பயங்கரம்.!
அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து 14 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Gun shoot in US: 14 குழந்தைகளை சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞர்.. அமெரிக்காவில் பயங்கரம்.! 18 year old youth killed 14 children by hand gun and riffle in Uvalde texas Gun shoot in US: 14 குழந்தைகளை சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞர்.. அமெரிக்காவில் பயங்கரம்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/25/34bc12d3c31f89ea1924e60f135d378e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து 14 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இளைஞர்..
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உவால்டி என்ற சிறிய பகுதி உள்ளது. இது மெக்ஸிகோவின் எல்லைப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள கிராமமாகும். இந்த கிராமத்தில் தான் உலகை அதிரவைத்துள்ள இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள பள்ளி ஒன்றினுள் துப்பாக்கி மற்றும் ரைஃபிளுடன் புகுந்த 18 வயது இளைஞர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உள்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
சரமாரியாக துப்பாக்கிச்சூடு..
துப்பாக்கிச்சூடு நடத்திய தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில் அந்த இளைஞரும் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2018க்குப் பிறகு பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது இது முதல் முறையாகும். கடந்த 2018ம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில், பார்க்லாண்டில் உள்ள பள்ளிக்குள் புகுந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பள்ளி மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை சுட்டுக்கொல்வது 2012க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 2012ம் ஆண்டு கன்னெக்டிகட் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்குள் புகுந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 குழந்தைகள் மற்றும் 6 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தத் திட்டமிட்ட இளைஞர் தனது வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு கைத்துப்பாக்கி மற்றும் ரைஃபிளுடன் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளே படித்து வருகின்றனர்.
தாங்கள் சொல்லும் வரை குழந்தைகளை அழைக்க பள்ளிக்கு வரவேண்டாம் என்று காவல்துறையினர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். குழந்தைகளை எப்போது அழைக்க வரவேண்டும் என்று விரைவில் நாங்கள் சொல்கிறோம் என்று காவல்துறையினர் பெற்றோர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் தொடர்கதை..
அமெரிக்காவில் தற்போது நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூடு இம்மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த மே 14ம் தேதி நியூயார்க்கில் உள்ள பஃபல்லோ மளிகைக்கடையினுள் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் படு கொலை செய்யப்பட்டனர்.
வெள்ளை நிற வெறியர் ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியில் உள்ள மளிகைக்கடையினுள் ஆயுத பாதுகாப்பு உடைகள் அணிந்து கொண்டு ஏஆர் 15 ரைஃபிளுடன் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதை லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார். இச்சம்பவத்திற்கு அடுத்த நாள் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு சர்ச்சுக்குள் புகுந்த நபர், சர்ச்சின் கதவை பூட்டிவிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்வலை..
இந்த நிலையில் குழந்தைகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 288 துப்பாக்கிச்சூடுகள் பள்ளிகளில் நடத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 212 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கன் வயலன்ஸ் அர்கைவ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த எந்த அரசுகளாலும் முடியவில்லை; இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகள் தொடர்கதையாகிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)