ஆவிகளுடன் பேச முயற்சி..! 11 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்..! "திகில்" பின்னணி என்ன..?
கொலம்பியா நாட்டில் ஓயிஜா போர்டு வைத்து இறந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்ற 11 குழந்தைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொலம்பியா நாட்டில் ஓயிஜா போர்டு வைத்து இறந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்ற 11 குழந்தைகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முருகேசா இந்த பேய் இருக்கா? இல்லையா? என்று ரஜினி வடிவேலுவிடம் சந்திரமுகி படத்தில் கேட்பது போல், நம்மில் பலர் நமக்குள்ளும் நம் நண்பர்களுடனும் அடிக்கடி கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. பேயை நம்பாதவர்களும் கூட ஓயிஜா போர்டு என்ற போர்டு மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசலாம் என நம்புகின்றனர். அது ஓயிஜா போர்டு மூலம் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.
ஓயிஜா போர்டு உருவான கதை?
19 ஆம் நூற்றாண்டில் தான் ஓயிஜா போர்டு உலகில் அறிமுகமானது என்று சொல்லலாம். 1848 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த “ஃபாக்ஸ் சிஸ்டர்ஸ் (fox sisters)" என்று அழைக்கப்பட்ட Leah Margret மற்றும் kate தங்களால் ஆவிகளுடன் பேச முடியும் என்றும் ஆவிகள் இவர்களிடம் சுவற்றில் அடித்து பதில் கூறும் என்றும் கூறியிருக்கின்றனர். இதற்கு பிறகுதான் இறந்தவர்களிடம் பேசப்படும் "seances " அமெரிக்கா முழுவதும் வலம்வர ஆரம்பித்தது. 1862 இல் ஆபிரகாம் லிங்கன் மனைவி தனது இறந்துபோன 11 வயது மகனுடன் seances நடத்தியிருக்கின்றனர்.
இதை எப்படி பயன்படுத்துவது?
ப்ளான்சேட் Planchette என்ற கருவி தான் இதன் ஆதாரம். அதன் மேல் நம் விரல்களை வைத்துக்கொண்டு நாம் கேள்வி கேட்க நினைக்கும் நபரை வேண்டி அவர் ஆன்மாவை எழுப்ப வேண்டும். நம் கேள்விகள் முன்வைக்கப்பட அது அந்த பலகையின் மேலுள்ள எழுத்துக்களுக்கு நகர்ந்து பதிலை சுட்டிக்காட்டும் என்று கூறப்படுகிறது. இந்த போர்டு-ஐ தான் பால்டிமோர் ஐ சேர்ந்த சார்லஸ் கென்னர்ட் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து “ஓயிஜா போர்டு" என்ற பெயரில் தயாரித்து விற்றனர். இதற்குக் காப்புரிமையும் பெறப்பட்டது.
இந்த போர்டைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்ய கதையும் இருக்கிறது. இந்த போர்டுக்கு பெயர் வைத்ததே ஒரு ஆவிதான் என்றும் கூறப்படுகிறது. இந்த போர்டை உருவாக்கியவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அந்த போர்டிடம் வினவிய போது "OUIJA " என்று காட்டியிருக்கிறது. “ஓயிஜா” என்றால் என்ன என்று கேட்டபோது “குட் லக் " என்று காட்டியுள்ளது. அதனால் OUIJA என்ற பெயரிலேயே இந்த போர்டு அழைக்கப்படலானது.
கொலம்பியாவில் என்ன நடந்தது?
சரி நாம் கதைக்கு வருவோம். கொலம்பியாவில் ஹாட்டோ எனும் பகுதியில் வேளாண் தொழில்நுட்ப மையம் இருக்கிறது. இங்கு பயிலும் 13 வயது முதல் 17 வயதுடைய மாணவர்கள் 11 பேர் ஓயிஜா போர்டு வைத்து வளாகத்தில் விளையாடியதாகத் தெரிகிறது. அப்போது அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, குமட்டல், சதை இறுக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் நிலையைக் கண்டவர்கள் அவர்களை மீட்பு சாக்கோரோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் ஹாட்டோ நகர மேயர் ஜோஸ் பாப்லோ டோலோசா ராண்டன், ஓயிஜா போர்டால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படும் என்றார்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் அளித்த பேட்டியில், ஒரு கன்டெய்னரில் இருந்த தண்ணீரை நாங்கள் அனைவரும் குடித்தோம். அதனாலேயே இது நேர்ந்தது என்று கூறினார்கள். மருத்துவர்களும் தாங்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைகளுக்கு மன ரீதியாக எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.