(Source: ECI/ABP News/ABP Majha)
100 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு பாதை இல்லை... கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் கடந்த 100 ஆண்டுகளாக சுடுகாட்டுப் பாதை அமைத்துக் கொடுக்காத நிலையில் மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் கடந்த 100 ஆண்டுகளாக சுடுகாட்டுப் பாதை அமைத்துக் கொடுக்காத நிலையில் மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டு பாதை இல்லாமல் அவதி
காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் 500 -க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள ஒரு பகுதியினர் ஊரின் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்ற இந்த சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாத நிலையில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் வழியையே பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் மேல் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் அமைத்தும் ,செல்லும் வழியில் பள்ளங்கள் தோன்டியும் நிலத்தின் உரிமையாளர்கள் இடையூறு செய்து வருவதாக தெரிய வருகின்றது .
அதிகாரிகள் நடவடிக்கை இல்லை
இது குறித்து உரிய துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த நிலையில் மூன்று முறை சமாதான கூட்டம் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றும் இதுவரையில் சுடுகாட்டுக்கு செல்லுகின்ற பாதையை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், இவர்கள் ஆக்கரிமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பு அகற்றாமல் அலட்சியமாக இருப்பதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் கருவம்பாக்கம் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கிராம மக்கள் புறக்கணிப்பால் கிராம சபை கூட்டம் ரத்தானது.
கிராமசபை கூட்டத்தில் முதல்வர் உரை
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்களை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும்வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, ஊராட்சிகளில் இல்லம்தோறும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார். கிராமசபை கூட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து, கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்க உள்ளார். அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்வர். கிராமசபை கூட்டத்துக்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.