கண்டமங்கலத்தில் ரெயில்வே மேம்பால பணி தீவிரம்; புதுச்சேரி - விழுப்புரம் இடையே போக்குவரத்து மாற்றம்
கண்டமங்கலத்தில் ரெயில்வே மேம்பால பணிக்காக புதுச்சேரி- விழுப்புரம் இடையே மாற்றுப்பாதையில் போக்குவரத்து; 21-ந் தேதி முதல் அமல்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் புதுச்சேரி-விழுப்புரம் ரெயில்வே பாதையில் மேம்பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கண்டமங்கலம் பகுதியில் உள்ள விழுப்புரம்-புதுச்சேரி ரெயில் பாதையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி-விழுப்புரம் இடையே வந்து செல்லும் வாகனங்கள் சிறிய சர்வீஸ் சாலை வழியாகவே இதுவரை சென்று வந்ததால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வாகனங்கள் மற்றும் பயணிகள் சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
அதன் அடிப்படையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு வரும் 21-ந் தேதி (புதன்கிழமை) முதல் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கலிதீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், பி.எஸ்.பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துகண்ணு, வில்லியனூர் வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண் டும். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் கன ரக வாகனங்கள் சிவரந்தகம், கீழூர், மிட்டாமண்டகப்பட்டு, பள்ளி நேலியனூர், திருபுவனைபாளையம், திருபுவனை வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்கள் திருவண்டார்கோயில், கொத்தமபுரி நத்தம், வனத்தாம்பாளையம், ராஜபுத்திர பாளையம், சின்னபாபு சமுத்திரம், கெண்டியாங்குப்பம், பங்கூர் வழியாக புதுச்சேரி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.