மழையில் நனைந்த 4 ஆயிரம் நெல் மூட்டைகள்; கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்... கவனிக்குமா அரசு ?
அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நான்காயிரம் நெல் மூட்டைகள் மழையால் நனைந்தது.

விழுப்புரம்: செஞ்சியில் இன்று காலை திடீரென பெய்த கனமழை காரணமாக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 4000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரம் மற்றும் செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வானூர், திருவக்கரை, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செயல்பட்டு வரும் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல் வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர், சேத்பட், ஆரணி, மேல்மருவத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 4000 நெல் மூட்டைகள் இன்று காலை பெய்த கனமழையின் காரணமாக நனைந்து சேதம் அடைந்தது. குறிப்பாக நனைந்த நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மழையில் நெல் மூட்டைகள் நனைந்தது ஒருபுறம் இருந்தாலும் மழை வெள்ளம் வடிய வழி இல்லாமல் தேங்கி நின்றதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் விவசாயிகளே தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடதிற்க்கு நெல் மூட்டைகள் நினையாமல் இருக்க பாதுகாப்பு மேல் கூரை அமைக்க விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதுவரை மேற்கூரை அமைக்காததால் மழையில் நெல் மூட்டைகள் நனைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.




















