விழுப்புரம்: செஞ்சி அருகே கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை
செஞ்சி அருகே பிறந்து 50 நாட்களே ஆன பெண் கைக்குழந்தையுடன் தாய் கிண்ணற்றில் குதித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்எடையாளம் கிராமம் கடகால் தோப்பு பகுதியை சேர்ந்தவர் லாலு பாஷா. இவரது மகள் பிர்தோஸ் (வயது 22). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள ஆவூரை சேர்ந்த அப்துல்லா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. அப்துல்லா திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிர்தோஸ் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹயானா என்று பெயரிட்டனர்.
இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி ஆவூரில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு பிர்தோஸ் குழந்தையுடன் சென்றார். பின்னர், அங்கிருந்து 17-ந்தேதி தாய் வீட்டுக்கு மீண்டும் வந்திருந்தார். நேற்று காலை 8 மணிக்கு பிறகு பிர்தோஸ் மற்றும் அவரது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். காலை 10 மணிக்கு மேல், அந்த பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு விவசாய கிணற்றில் குழந்தை ஒன்று பிணமாக மிதந்ததை அந்த பகுதியினர் பார்த்தனர். இதுபற்றி அறிந்த பிர்தோசின் பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது, அது அவர்களது பேத்தி ஹயானா என்பது தெரியவந்தது. ஆனால் பிர்தோசை காணவில்லை.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த செஞ்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிர்தோஸ் கிணற்றுக்குள் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில், கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு பிர்தோஸ் பிணமாக மீட்டு கொண்டு வந்தனர். காரணம் என்ன? தகவல் அறிந்த செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பிர்தோஸ் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து குழந்தை, தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக, கை குழந்தையுடன் பிர்தோஸ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்