விழுப்புரம் நீதிமன்ற கட்டிடத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி
தீயணைப்பு துறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கீழே இறக்கினர்.
விழுப்புரம் நீதிமன்ற வளாக வாயில் கட்டிடத்தில் மயிலம் காவல்துறையை கண்டித்து ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. தீயனைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை கீழே இறக்கினர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பாதிராபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் என்பவர் இன்று காலை விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் கட்டிடத்தின் மேல் ஏறி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதனை கண்ட பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அய்யானாரை கீழே இறக்கினர்.
அதன் பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்ததில், மயிலம் காவல் நிலையத்திற்கு நேற்றைய தினம் விசாரணைக்கு சென்ற அய்யனாரின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவைகளை போலீசார் வாங்கி கொண்டு மிரட்டல் விடுத்து தொல்லை கொடுப்பதாக கூறினார். பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டவரை காவல்துறை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நீதிமன்ற வளாகத்தில் எப்போதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் காவல்துறையினர் பணியில் இல்லாததால் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
தற்கொலைக்கு முயன்றவர் திருட்டு உள்ளிட்ட 16 வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், அவர் மீது மயிலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் நேற்றைய தினம் மது போதையில் அய்யனார் இருந்ததால் இருசக்கர வாகனத்தை வழங்கவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நுழை வாயில் கட்டிடத்தின் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது