பள்ளி மாணவனை கத்தியால் கழுத்தை கிழித்த திமுக நிர்வாகி... பதற்றம் தணியாத திண்டிவனம்
சாலையை சரி செய்யாத அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை திட்டிய நிலையில் அங்கிருந்த கறிகடை உரிமையாளரும், திமுக நிர்வாகியுமான அபி (28) என்பவர் ஏன் சத்தம் போடுகிறாய் என்று தட்டிகேட்டு வாக்குவாதமாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூதேரி பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சந்தோஷ்குமார் (18), இவர் திண்டிவனம் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் திண்டிவனம் வந்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில்வே ஒரு கண் பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள வேகதடையில் வாகனம் தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் சாலையை சரி செய்யாத அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை திட்டியதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கிருந்த கறிகடை உரிமையாளரும், திமுக நிர்வாகியுமான அபி (28) என்பவர் ஏன் சத்தம் போடுகிறாய் என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த அபி என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சந்தோஷின் இடது கையில் பலமாக குத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து கத்தி தடுமாறி கீழே விழுந்ததால் அபி மீண்டும் ஓடிச் சென்று அருகில் இருந்த சலூன் கடையிலிருந்து ஷேவிங் செய்யும் கத்தியை எடுத்து வந்து மீண்டும் சந்தோஷை கழுத்துப் பகுதியில் கிழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அபியுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேரும் சந்தோஷை பலமாக தாக்கி உள்ளனர். அப்போது பூதேரி பகுதியில் இருந்து வந்த புஷ்பராஜ் (20) என்பவர் சந்தோஷ்குமாரை ஒரு கும்பல் தாக்குவதை பார்த்து தடுக்க முயன்றுள்ளார்.
சந்தோஷ் குமாரை தாக்கிக் கொண்டிருந்த கும்பல் புஷ்பராஜை இடது தோளில் கடித்துள்ளனர். வலி தாங்க முடியாத புஷ்பராஜ் அலரியடித்து அங்கிருந்து ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் போலீசார் சந்தோஷ் குமாரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சந்தோஷ்குமார் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் திண்டிவனம் கிடங்கல்-1 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் அபி என்கின்ற அபிலேஷ்(30), ஓத்தவாடை தெரு சேகர் மகன் சுந்தர்(30), கோட்டைமேடு முதல் தெரு ரெஜிநாத்(21), பிள்ளையார் கோவில் தெரு பாபு மகன் ஷாஜகான்(20), முத்துகிருஷ்ணன் தெரு ரிஸ்வான்(19), சனாவுல்லா (19) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
திமுக பிரமுகரான அபி, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தீவிர ஆதரவாளர் என்பதும், இவர் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலின் போது இவரது குருநாதரான திமுக கவுன்சிலர் எம்.டி பாபுவை எதிர்த்துப் போட்டியிட்ட சுதா என்ற பெண்மணி பாதுகாப்பு கேட்டு ரோஷனை காவல் நிலையம் சென்ற போது காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி காவல் நிலையம் சூறையாடிய வழக்கும், மயிலம் காவல் நிலையத்தில் அபி மீது சலூன் கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இவர் அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர் என்பதால் திண்டிவனம் பகுதிகளில் பல்வேறு அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு "குட்டி தாதா " -வாக தன்னைக் காட்டிக் கொண்டு முகநூல்களில் பல்வேறு கெட்டப்புகளில் புகைப்படங்களை பதிவிட்டு தன்னை ஒரு குட்டி தாதாவாக உருவகப்படுத்தி தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்த அபி என்கின்ற ரெமோ அபி.