Villupuram : 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசு... கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள்!
எடப்பாளையம் கிராமத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய் கிராமமாக அறிவித்ததற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஜமாத் நிர்வாகிகள்
விழுப்புரம்: எடப்பாளையம் கிராமத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய் கிராமமாக அறிவித்ததற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஜமாத் நிர்வாகிகள்.
40 ஆண்டுகால கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அருகே உள்ளது எடப்பாளையம் கிராமம். இந்த கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் எடப்பாளையம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
பொன்முடிக்கு உற்சாக வரவேற்பு
40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக தொகுதியின் முன்னாள் அமைச்சரும், திமுக கழகத் துணை பொது செயலாளர் உள்ள பொன்முடிக்கு கிராம மக்களின் சார்பில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் புடவை சூழ உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் எடப்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஜமாத் நிர்வாகிகள்
இந்த நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகி முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சால்வை அணிவித்து இஸ்லாமியர்கள் முறைப்படி கட்டி அணைத்து கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி இனிப்புகளை வழங்கினார். மேலும் எடப்பாளையம் கிராமத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் துண்டு பிரசுரத்தை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.