Crime: விழுப்புரத்தில் அதிர்ச்சி....சீட்டு பணம் கட்ட தவறிய சமையல் மாஸ்டர்...விஷம் அருந்தி தற்கொலை...பின்னணி என்ன ?
விழுப்புரத்தில் சீட்டு பணம் கட்டதவறிய சமையல் மாஸ்டர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரத்தில் சீட்டு பணம் கட்டதவறியதால் கூடுதலாக வட்டியுடன் சேர்த்து பணம் கட்ட கூறி சமையல் மாஸ்டரை உறவினர்கள் முன்னிலையில் அரை நிர்வணமாக்கியதால் அவமானம் தாங்காமல் சமையல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள அரசமங்கலம் கிராமத்தை சார்ந்த சமையல் மாஸ்டரான சந்துரு என்பவர் சேந்தனூரை சார்ந்த குமரவேல் என்பவரிடம் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு லட்சத்திற்காக சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். சீட்டு ஆரம்பிக்கும் போதே 2021 ஆம் ஆண்டு சந்துரு சீட்டு பணத்தை எடுத்த நிலையில் மாதந்து தோறும் பணம் கட்டி வந்த நிலையில் இடையில் சில மாதங்களாக சந்துரு சீட்டிற்கான பணத்தை கட்டாமல் இருந்துள்ளார். இதனையடுத்து சந்துரு எக்விடாஸ் நிறுவனத்தில் மூன்று லட்சம் லோன் எடுத்து சீட்டு பணம் 95 ஆயிரம் கட்ட வேண்டியதற்கு 30 ஆயிரம் கட்டுவதற்காக பணத்தை சீட்டு பிடித்த குமரவேல் என்பவரிடம் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது சந்துரு பணம் கட்டாமல் இருந்ததால் வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கடந்த 10 ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர். சண்டையின் போது குமரவேல் ஆத்திரத்தில் சந்துருவினை தாக்கி சட்டையை கிழித்து அரைநிர்வாணமாக்கியுள்ளார். அரைநிர்வாணமாக உறவினர்கள், கிராம மக்கள் முன்பு நின்றதால் அவமானம் தாங்காமல் சந்துரு பூச்சி மருந்து வாங்கி வந்து வீட்டிலையே அருந்தி வாந்தி எடுத்துள்ளார்.
மகன் நீல நிறமாக வாந்தி எடுப்பதை கண்ட தாய் வளர்மதி மகனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இரண்டு தினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்துரு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு காரணமான குமரவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வளர்மதி மற்றும் உறவினர்கள் புகார் அளித்தனர். சீட்டு பணம் கட்டதவறியதால் கூடுதலாக வட்டியுடன் சேர்த்து பணம் கட்ட கூறி சமையல் மாஸ்டரை உறவினர்கள் முன்னிலையில் அரை நிர்வணமாக்கியதால் அவமானம் தாங்காமல் சமையல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.