ATM-ல் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல்... 24 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய விழுப்புரம் போலீஸ்
ATM-ல் அலுமினிய தகடு வைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்னை சென்று அங்கிருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் அலுமினிய தகட்டினை சொருகி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்தனர்.
ஏடிஎம் மையத்தில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்
விழுப்புரம் புதுச்சேரி சாலையான ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இரவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பணம் எடுக்கும் எந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் உள்பக்கமாக அலுமினிய தகடு ஒன்றை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அதன் பிறகு அந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் பலர், தங்களுடைய ஏடிஎம் அட்டையை சொருகி பணம் எடுக்க முயன்றபோது பணம் ஏதும் வரவில்லை என்பதால் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அவர்களது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் இது போன்ற கோளாறுகள் அடிக்கடி வரும், பின்னர் தங்கள் வங்கி கணக்கிற்கு பணம் தானாகவே வரவு வைக்கப்பட்டு விடும் என்று கருதி அவர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அந்த ஏடிஎம் மையம் அருகில் ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து இறங்கிய 4 பேர்களில் 3 பேர் மட்டும் ஏடிஎம் மையத்திற்குள் சென்று அங்குள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு பெண் அங்கிருந்த நபர்களை பார்த்து திருடன் திருடன என கூச்சலிட்டார். உடனே அந்த நபர்கள் அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கபட்டு வந்த விழுப்புரம் நகர போலீசார் சென்று விசாரணை செய்தனர். ஏடிஎம் மைய பணம் எடுக்கும் எந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் அலுமினிய தகடை வைத்து பணம் வெளியே வராமல் தடுக்கப்பட்டு அந்த எந்திரத்திற்குள்ளேயே விழுந்துள்ளது. பின்னர் அந்த நபர்கள் கள்ளச்சாவி மூலம் அந்த இயந்திரத்தை திறந்து அதனுள் கிடந்த பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஏடிஎம் மையத்தில் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்த நபர்கள் யார் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
வடமாநில ATM கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பெங்களூர் சென்று கைது செய்த போலீஸ்
இந்நிலையில், நூதன முறையில் பணம் கொள்ளையடித்த நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் சித்ரா, காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லியோசார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையிலான மூன்று தனிப்படையினர் சம்பவம் இடங்களை பார்வையிட்டு அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து குற்றவாளிகள் செல்லும் வழிதடத்தை கண்டறிந்து பின்தொடர்ந்து சென்று எதிரிகளை அடையாளம் கண்டு பெங்களூரிலிருந்து வடமாநிலத்திற்கு தப்பி செல்லமுயன்ற உத்திரபிரதேசத்தை சேர்ந்த சோனு (23), சஞ்சய்குமார் 23, சிவா 27, லவ்குஷ் ஆகியோர்களை பெங்களூரில் கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கு சொத்தான ரூ.10,200, செல்போன்கள் மற்றும் 4 ATM கார்டுகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த சோனு தலைமையிலான குற்றவாளிகள் விமானம் மூலம் சென்னை வந்து திருவல்லிகேணி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இணைதளம் மூலம் நான்கு சக்கரவாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்து விழுப்புரம் நகரத்தில் ரெட்டியார்மில், M.G ரோடு மற்றும் மாம்பழப்பட்டு ரோடு பகுதிகளில் உள்ள ATM-ல் அலுமினிய தகடு வைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்னை சென்று அங்கிருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது பெங்களூர் மற்றும் உத்திரபிரதேசத்தில் ATM கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.





















