Villupuram: நகரமன்ற கூட்டத்தில் செயல்படாத மைக்குகள்.. கீழே போட்டு உடைத்த அதிமுக கவுன்சிலர் - முழு பின்னணி..!
விழுப்புரம் : திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் செயல்படாத மைக்கை அ.தி.மு.க. கவுன்சிலர் கீழே போட்டு உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரமன்ற கூட்டம் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் குப்பைகள் கூட அள்ளப்படவில்லை. ஆனால் ரூ.9 கோடி வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 33 வார்டுகளிலும் எந்தவித திட்டப்பணிகளும் நடைபெற வில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி வசூலானது 9 கோடி. ஆனால் செலவானது 11 கோடி என்றார். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் தொடங்கியது.
கீழே போட்டு உடைக்கப்பட்ட மைக்குகள்:
உடனே கவுன்சிலர்கள் 11 கோடி செலவு செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மைக்குகள் சரிவர செயல்படாததால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர் ஜனார்த்தனன் தனது வார்டில் பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி மைக்கை கீழே போட்டு உடைத்தார். இதனால் திடீரென பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜனார்த்தனன் உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் திமுக. கவுன்சிலர் ராம்குமார் கேள்வி கேட்டதற்கு, அலுவலர்கள் உட்காந்து பதில் சொன்னதால் ஆத்திரமடைந்த அவர், மக்கள் பிரதிநிதியான எங்களை மதிக்கவேண்டும் என்று கூறினார். அதன்பிறகு அலுவலர்கள் எழுந்து நின்று பதில் அளித்தனர். அதற்கு கவுன்சிலர் ராம்குமார் மரியாதையை கூட கேட்டு பெற வேண்டியுள்ளது என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்