ABP IMPACT: கழிவறையில் வசித்த மூதாட்டி... உதவிக்கரம் நீட்டிய சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா
விக்கிரவாண்டி அருகே மகன், மகள்கள் விட்டு சென்ற நிலையில் வீடு இல்லாமல் அரசு கட்டிகொடுத்த கழிவறையில் வசித்த மூதாட்டிக்கு சட்டமன்ற உறுப்பினர் வீடு கட்டி தந்துள்ளார்.
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மகன், மகள்கள் விட்டு சென்ற நிலையில் மூதாட்டி ஒருவர் வீடு இல்லாமல் அரசு கட்டிக்கொடுத்த கழிவறையில் வசித்து வந்த நிலையில் ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தற்காலிகமாக வீடு அமைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கணவர் உயிரிழந்த நிலையில் மகன், மகள்கள் விட்டுச் சென்றதால் ஒரு வருடமாக அரசு கட்டிகொடுத்த கழிவறையில் வசித்து வரும் 70 வயது மூதாட்டியின் நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மாரிமுத்து(70), இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் நடைபெற்று அவர்களது மாமியார் வீட்டோடவே சென்றுவிட்டனர். மாரிமுத்துவின் கணவர் ராஜாராம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போதிலிருந்து மாரிமுத்துவின் மகன் மற்றும் 2 மகள்கள் எவரும் மூதாட்டி மாரிமுத்துவை கண்டுகொள்ளாமல் தனியாக விட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து வெட்டுகாடு கிராமத்தில் உள்ள சொந்த குடிசை வீட்டில் தனியாக மூதாட்டி மாரிமுத்து கூலி வேலைகளுக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் மூதாட்டி மாரிமுத்துவின் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அக்கிராம விஏஓவிடம் கேட்டதற்கு பட்டா இல்லாததால் அரசு உதவி செய்ய முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூதாட்டியிடம் இருந்த கொஞ்சம் பணத்தால் பிளாஸ்டிக் கவரால் கூறை வீட்டை பராமரித்துள்ளார். அதுவும் கடந்த ஆண்டு அடித்த பலத்த காற்று மழையில் சேதமடைந்துள்ளது. இதனால் செய்வதறியாத மூதாட்டி அப்பகுதியில் உள்ள கோயில், மற்றும் பொது இடங்களில் படுத்து உறங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து அவரது வீட்டில் அரசு கட்டிகொடுத்த சிறு கழிவறையில் அவரது துணிமணிகள், ரேஷன் பொருட்கள், பாத்திரங்களை வைத்துகொண்டு கடந்த ஒரு வருடமாக கழிவறையிலே உட்கார்ந்தபடி படுத்து உறங்கி வாழ்ந்து வருவதாக கூறினார். இந்த நிலையில் ABP நாடு செய்தியாக வெளியிட்ட பின் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தகர ஷட் மூலம் வீடு கட்டி தந்துள்ளார்.