வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர் மட்டம்
வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் வீராணம் ஏரியின் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங் குழி ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இரண்டு நாட்களில் வினாடிக்கு 2 ஆயிரத்து 500 அடியாக அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் ஏரியின் நீர்மட்டம் 47 அடியை எட்டியது.
இதைத் தொர்டர்ந்து லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதே போல் சேத்தியாதோப்பு வி.என்.எஸ். மதகின் வழியாக நீர் திறப்பானது வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டது. அதாவது ஏரியில் இருந்து மொத்தம் 2400 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வந்தது
இதனால், இந்த ஏரிக்கு மேட்டூர் அணை நீர் வரத்து மற்றும் பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்த நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது, இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன் காரணமாக வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரை வைத்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இதற்கான அறுவடை தற்போது நடந்துவருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 45 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக குறைந்தது.
நேற்று வீராணம் ஏரிக்கு 382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அது இன்று 333 கனஅடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை நடந்து வருவதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இருப்பினும் சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து 61 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்