VCK: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் பாஜக கலக்கம் - விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன்
எதிர்க்கட்சிகள் ஒன்றினைவதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. இதனால், அமலாக்க துறையை ஏவி பாஜக செயல்படுகிறது - விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் குற்றச்சாட்டு
விழுப்புரம்: ஊழல் வாதிகள் அடைக்கலம் புகுகின்ற இடமாக பாஜக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளதால் அமலாக்க துறையை எதிர்க்கட்சிகள் மீது ஏவி பாஜக செயல்படுவதாகவும் விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரத்திலுள்ள அமைச்சர் பொன்முடி இல்லம் விக்கிரவாண்டியிலுள்ள சூரியா பொறியியல் கல்லூரி ரங்கநாதன் தெருவிலுள்ள கயல் பொன்னி அலுவலகங்கள் ஆகிய மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை அடுத்து அமைச்சர் பொன்முடி இல்லத்தில் சோதனை மேற்கொண்டதால் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடம் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் ஊழலை ஒழிப்போம் என்று கூறிவிட்டு ஊழல் வாதிகள் அடைக்கலம் புகுகின்ற இடமாக பாஜக உள்ளதாகவும் எதிர்கட்சிகள் ஒன்றினைவதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளதாகவும் அமலாக்க துறையை எதிர்கட்சிகள் மீது ஏவி பாஜக செயல்படுவதாக தெரிவித்தார்.
மேலும் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் பாஜக செயல்படுவதாகவும் மலிவான அருவருப்பான அரசியலை பாஜக செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். ஆளுநர் ரவியுடான நேரிடை கருத்தியல் மோதலை அமைச்சர் பொன்முடி மேற்கொண்ட போது கன்னியமான முறையில் கையாண்ட ஆளுமைமிக்க அமைச்சராக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திகழ்வதாகவும், கன்னியமான முறையில் பாஜக சீண்டலை கையாள திமுக கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக விரக்தியின் எல்லைக்கு சென்றுள்ளதாக கூறினார். காலாவதியான வழக்கை கையில் எடுத்து விசாரிக்கும் மத்திய அரசின் நோக்கத்தை கடுமையாக கண்டிப்பதாகவும், சட்டப்பூர்வமாக கன்னியமாக இதனை எதிர்கொள்ள உள்ளதாகவும் மனநலம் குன்றிய ஹெச். ராஜா, அண்ணாமலை போன்ற சீண்டலுக்கு ஆளாகாமல் நடவடிக்கை எடுப்போம் என்றும் அடக்கு முறையால் அழிந்து போகிற இயக்கம் திமுக அல்ல கூறினார்.
அமலாக்க துறை சோதனை நிறைவு:
தமிழக உயர் கல்விதுறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லம் கெளதமசிகாமணிக்கு சொந்தமான விக்கிரவாண்டியிலுள்ள சூரியா பொறியியல் கல்லூரி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கயல் பொன்னி ஏஜென்சி ஆகிய மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்க துறையினர் அமைச்சர் பொன்முடி இல்லத்திலுள்ள அறைகளில் சோதனை மேற்கொண்ட பின்பு வீட்டின் வாயிலில் நிறுத்தபட்டிருந்த காரில் சோதனை செய்து இரு அறைகளிலும் வைக்கபட்டிருந்த இரண்டு பீரோக்களிலும் சோதனை செய்தனர். பீரோக்களை திறப்பதற்கான சாவி அமைச்சர் பொன்முடி மனைவியிடம் உள்ளதால் பூட்டினை திறக்கும் தொழிலாளியை அழைத்து வந்து மாற்று போட்டு பிரோக்களை திறந்து அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் சோதனையானது 14 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்து கொண்டு இரவு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் கயல் பொன்னி ஏஜென்சி சூரியா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து சோதனையை முடித்து கொண்டு அமலாக்க துறையினர் புறப்பட்டு சென்றனர். அமலாக்க துறையினர் 17 மணி நேர சோதனை மூன்று இடங்களில் நிறைவு செய்தனர். அமலாக்க துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி இல்லத்தில் இரு பீரோக்களில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் கயல் பொன்னி ஏஜென்சி, சூரியா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். நள்ளிரவோடு அமலாக்க துறையினரின் சோதனைகள் நிறைபெற்றன.