மாணவர்கள் ஆபத்தான நிலையில் டிராக்டரில் பயணம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
டிராக்டரில் பள்ளி மாணவர்களை ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வைத்த வீடியோவானது, பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சியில் பள்ளி மாணவர்களை டிராக்டரில் ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வைத்தது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10க்கு மேற்பட்டவர்களை, அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பழனி என்பவர், வகுப்பறையில் மாணவர்கள் அமர பயன்படுத்தப்படும் இருபதுக்கும் மேற்பட்ட நாற்காலியை டிராக்டரில் ஏற்ற வைத்து, ஆலம்பூண்டி பள்ளியிலிருந்து சத்தியமங்கலம் பகுதியில் இயங்கி வரும் ராஜா தேசிங்கு வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வரை, சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் டிராக்டரில் மேஜை நாற்காலியை பிடித்தவாறு, பள்ளி மாணவர்களை ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வைத்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி பகுதியில், அரசு பள்ளி மாணவர்களை டாட்டா ஏசி வாகனங்களில் அழைத்துச் சென்ற சம்பவம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகி சமூக ஆர்வலர்களிடையே கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது டிராக்டரில் பள்ளி மாணவர்களை ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வைத்த வீடியோவானது, பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை, தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பழனி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டத்தில், ஒரு ஆட்டோவில் 30 மாணவர்களை அடைத்து பள்ளிக்கு கொண்டு சென்ற விவகாரம் பூதாகாரமாகியது. அதனால் தான் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணம் குறித்து, நமது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வரவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இருசக்கர வாகனங்களில் நான்கு பேரை அழைத்து செல்வது, ஆட்டோ, டாட்டா ஏசி, டெம்போக்களில் அதிக அளவிலான பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது என தொடர்ந்து மக்கள் ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகின்றனர்.