விழுப்புரம் அருகே சோகம்... கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி
கல்குவாரி குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தபோது,எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருவகரையை சேர்ந்தவர் கஸ்பர். இவரது மகள் அலானா (வயது6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். அலானா நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது,எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.
இது குறித்து வானூர் போலீசாருக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி அலானா உடலை மீட்டனர். இது குறித்து வானூர் காவல் ஆய்வாளர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவக்கரை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளது. கல் எடுத்து பின் அதனை மூடாமல் விட்டு சென்றதால் அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் பலர் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
"குவாரியில் 100 அடியில் இருந்து 300 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது"
வானுார் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான குவாரிகள் உள்ளன. குறிப்பாக அரசு அனுமதி பெற்ற 20 குவாரிகளும், 80க்கும் மேற்பட்ட கல் அரவை தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.இங்கு, வெடி வைத்து பாறைகளை உடைத்த பின், அதே பகுதிகளில் உள்ள கல் அரவை தொழிற்சாலைகளுக்கு ஜல்லி, கிரஷர் பவுடராக மாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுவதால், வழியெல்லாம் கற்கள் கொட்டிய படி செல்கிறது. குறிப்பாக கிரஷர் பவுடர் ஏற்றி செல்லும் வாகனங்களில் தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால், அதில் இருந்து பறக்கும் பவுடர்கள், சாலையோர வீடுகள் மீது படிவதோடு, சாலைகளிலும் கொட்டியபடியே செல்கிறது.
இதனால், பின்னால் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கண்களில் துாசு விழுந்தும், கண் எரிச்சலாலும், சுவாச கோளாறாலும் பாதிக்கப்படுகின்றனர்.அதுமட்டுமின்றி குவாரி மற்றும் அரவை தொழிற்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல வசதியாக ஏரி மற்றும் பாசன கால்வாய்களை துார்த்து சாலை வசதி செய்ததால், பாசனம் பாதிப்பு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் குறைந்து போனது.கனரக வாகனங்களால் கிராமப்புற சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டன.
குவாரியில் 100 அடியில் இருந்து 300 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது. ஆழமாக கற்கள் தோண்டப்பட்ட சில குவாரிகள் தற்போது மூடியே கிடக்கிறது. அங்கு பாதுகாப்பு வேலி அமைக்காததால் குளிக்கச் செல்பவர்கள், தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.