மரக்காணம் அருகே வலுவிழந்த ஏரிக்கரையில் நடப்பட்ட மின்கம்பம் - உயிர் சேதம் ஏற்படும் அபாயம்
விழுப்புரம்: மரக்காணம் அருகே முருக்கேரி கிராமத்தில் வலுவிழந்து ஏரிக்கரையில் மின்கம்பம் நடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி
விழுப்புரம்: மரக்காணம் அருகே வலுவிழந்த ஏரிக்கரையில் நடப்பட்ட மின்கம்பத்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வலுவிழந்த ஏரிக்கரை:
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே சிறுவாடி முருக்கேரி கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தனர். அதுமட்டுமின்றி அந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு இந்த ஏரி பயனுள்ளதாக இருந்தது. ஆண்டுகள் உருண்டோடியும், ஏரியை பராமரிக்கவில்லை. மேலும் ஏறி தூர்வாரப்படாததாலும் ஏரி முழுவதும் புதர் மண்டியும், முட்செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. ஏரியில் உள்ள மதகுகளும், கலிங்கல்லும் சேதமடைந்துள்ளது.
இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. மழையையும், ஏரியையும் நம்பி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் பயிர் அறுவடைக்கு முந்தைய காலத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகிவிடுகின்றன. இதனால் ஆண்டுதோறும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள், அதுமட்டுமின்றி அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியின் கரைகளும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.
மின்கம்பத்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம்:
தற்போது ஏரியை குப்பை கொட்டும் இடமாகவும், இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் மாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஏரிக்கரை வலுவிழந்து இருக்கும் சூழ்நிலையில் உடையும் நிலையில் காணப்படும் மதகு அருகே ஏரிக்கரை பகுதியில் மேட்டை உடைத்து அதற்கு மேல் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக தனியார் திருமண மண்டபம் அருகே இருந்த மின்மாற்றியை மாற்றி அமைப்பதற்காக மின்கம்பங்கள் நடும் பணியில் சாலை விரிவாக்க ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த ஒரு ஆய்வு செய்யாமல் வலுவிழந்த ஏரிக்கரையில் மின் கம்பங்கள் நடப்பட்டது விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மேலும் இது சம்பந்தமாக கிராமத்தை சேர்ந்த வருவாய் வருவாய்த் துறையினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் மின்கம்பங்களை நட்டுள்ளனர், வரும் காலம் மழைக்காலம் என்பதனால் வலுவிழந்து ஏரிக்கரையில் நடப்பட்ட மின்கம்பம் சரிந்து உயிர் சேதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் உடனடியாக அந்த மின்கம்பதை அகற்ற விவசாயிகள் மற்றும் அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.