River festival 2024: விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஆற்று திருவிழா - அலைமோதிய மக்கள் கூட்டம்
விழுப்புரத்தில் வெகு விமரிசையாக 24 இடங்களில் நடைபெற்று வரும் ஆற்று திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
விழுப்புரம் மாவட்டத்தில் 24 இடங்களில் நடைபெற்று வரும் ஆற்று திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திராளக பங்கேற்று பல்வேறு கோயில்களில் இருந்து வந்த சாமிகளை ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவாக தை மாதத்தின் 5ம் நாளான்று ஆற்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆற்று திருவிழாவானது, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரணமாக விளங்கி வரும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, தை மாதத்தின் 5ஆம் நாளான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு, வராக நதி ஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆற்று திருவிழாவை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆறுகள் செல்லும் இடங்களான சின்னக் கள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், பிடாகம், பில்லூர், அகரம் சித்தாமூர், அய்யூர் அகரம், அரகண்டநல்லூர், வீடூர், விக்கிரவாண்டி, உள்ளிட்ட 24 இடங்களில் நடைபெற்று வரும் இந்த ஆற்று திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்தும் மாட்டு வண்டி, டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆற்றுப் படுகைக்கு விநாயகர், முருகர், சிவன், பார்வதி, பெருமாள், காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆற்று திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறுகளுக்கு வந்திருந்து சுவாமிகளுக்கு செய்யப்பட்ட தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை தரிசனம் செய்து ஆற்று தண்ணீரில் விளையாடியும், ஆடிப்பாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் விற்கப்பட்ட விதவிதமானபொருட்களை வாங்கியும், ராட்சத ஊஞ்சல், ரங்கராட்டினம் உள்ளிட்ட பொழுதுப்போக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் ஆற்று திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சின்னக் கள்ளிப்பட்டு, பிடாகம் ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மக்கள் கூட்டத்தால் தென்பெண்ணையாறு நிரம்பி வழிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா நடைபெற்று வரும் 24 இடங்களிலும் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.