தமிழகத்தின் இருண்ட வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இடம்பெற்றுவிடும் - ராமதாஸ்
மின்வாரியத்தில் 20 நாட்களில் 7 மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது - மருத்துவர் ராமதாஸ்
விழுப்புரம்: தமிழகத்தின் இருண்ட வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இடம்பெற்றுவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
மத்திய அரசு துறைகளில் 45 பல்வேறு துறை பணிகளை நிரப்ப முடிவு செய்ததை எதிர்ப்பு தெரிவித்த பின் ரத்து செய்யப்பட்டது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் உண்மை கண்டறிவு குழு தலைவர் கார்த்திகேயனுக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது . ரூ 1 லட்சம் அளவில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 32209 பணிகளுக்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். சமூக நிதி என பேசும் முதல்வர் தமிழகத்தில் சமூக அநீதி செய்துள்ளார். சமூக நீதி சார்ந்த விவகாரங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். அனைத்து பணி நியமனங்களும் இட ஒதுக்கீடு முறையில் நிரப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு செய்யவேண்டும் என்று கூறும் முதல்வர் யாரோ சிலரை திருப்தி படுத்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று கூறிவிட்டார். 69 சதவீத இட ஒதுக்கீடை காக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும். இக்கடமையை செய்ய தவறினால் தமிழகத்தின் இருண்ட வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இடம்பெற்றுவிடும்.
2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு அடுத்தமாதம் துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று 10 ஆண்டுகளாக பாமக வலியிறுத்தி வருகிறது. இக்கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை. சமூகநீதிக்கு சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்கவேண்டும்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வில் வெளிப்படைதன்மை வேண்டும். முதல் பிரிவு தேர்வில் விடை குறிப்பை வெளியிடுவதில்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விளக்கம் தெரிவிக்கவேண்டும் என கூறியுள்ளது. மத்திய அரசுப்பணி தேர்வாணம் நடத்திய தேர்வுக்கான முடிவுகள் 15 நாளில் வெளியிடப்பட்டது. ஆனால் டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வு முடிவுகளை உடனுக்குடன் வெளியிட்டு நேர்முக தேர்வை ரத்து செய்யவேண்டும்.
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சுதந்திரதின நாள் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனே நடத்தவேண்டும். தமிழகத்தில் மார்ச் 2022ல் அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அதன் பின் இத்தேர்வு நடத்தப்படவில்லை. இத்தேர்வு நடத்தப்படாததால் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களால் தனியார் பள்ளிக்குகூட வேலைக்கு செல்ல முடியவில்லை.
உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படவேண்டும். மலேசியாவில் உள்ள மலாயா பல்கலை கழகத்தில் திருவள்ளுவர் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது வரவேற்கதக்கது.
மின்வாரியத்தில் 20 நாட்களில் 7 மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாதது, 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. இதை உடனே நிரப்பி மின்வாரிய ஊழியர்கள் நலனை பாதுகாக்கவேண்டும். பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவேண்டும். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கடுமையான சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்கவேண்டும். பாஜக- திமுக நெருக்கமாக இருப்பது குறித்த கேள்விக்கு என்னமோ நடக்குது நடக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார் . அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.