கனமழையால் செல்லிப்பட்டு படுகை அணை உடைப்பு!
செல்லிப்பட்டு பிள்ளையார்குப்பம் படுகை அணையின் நடுப்படுதி கனமழை காரணமாக முழுமையாக உடைந்தது
புதுச்சேரியில் செல்லிப்பட்டு பிள்ளையார்குப்பம் படுகை அணையின் நடுப்படுதி கனமழை காரணமாக முழுமையாக உடைந்தது. புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. நூற்றாண்டு பழமையான இந்த அணை உரிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 2016-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது.
அவ்வப்போது மழைக் காலங்களில் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்படும். கடந்த டிசம்பரில் செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீர் அழகாக வழிந்தோடி சுற்றுலாத் தலமாகவும் மாறியது. அதைத் தொடர்ந்து பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக படுகை அணையில் மேலும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறிக் கடலில் கலந்தது. இதற்கிடையே கடந்த 12ம் தேதி செல்லிப்பட்டு அணையைப் பார்வையிட்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்கான திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோடைக் காலத்தில் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். சுற்றுலாத் தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே அண்மையில் பெய்த கனமழையாலும், வீடூர் அணை திறப்பினாலும் சங்கராபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்துப் படுகை அணைகளும் தண்ணீரில் மூழ்கின. சில இடங்களில் ஆற்றின் கரையைத் தாண்டியும் தண்ணீர் வெளியே வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே சேதமடைந்துள்ள செல்லிப்பட்டு பிள்ளையார் குப்பம் படுகை அணையில் தற்போது பெருக்கெடுத்து வரும் பெருவெள்ளத்தினால் மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறிய அளவில் உடைந்திருந்த நடுப்பகுதி தற்போது முழுமையாக உடைந்துள்ளது. இதனால் பல ஆயிரம் கன அடி தண்ணீர் மீண்டும் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. இது அப்பகுதி மக்களையும், விவசாயிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இந்த அணையை வந்து பார்ப்போம். இம்முறை படுகை அணை உடைந்துள்ளது. அடுத்த முறை இந்த இடத்தை பார்ப்பது கஷ்டம்தான். இதனை அரசு கட்டுமா என்பது தெரியாது. அணை உடைந்திருப்பது ஏமாற்றம்தான். ஏற்கெனவே அணை சிறிய அளவில் உடைந்திருந்தது. இதனை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசென்றும் உடைப்பைச் சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அணையில் மேலும் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இந்த அணை முழுமையாக உடைய அதிகாரிகள் மட்டும்தான் காரணம். எனவே இந்த அணையைச் சீரமைப்பதோடு, புதிய அணை கட்டித்தர வேண்டும் என்றனர்.