புதுச்சேரியில் பாதுகாப்பு, ஆன்மிகம், சேவை : RRU & ஆரோவில் இணைந்து இளைஞர்களுக்கு புதிய பாதை!
ஆரோவில்லின் 8 பள்ளிகளில் (4 ஆரோவில் பள்ளிகள், 4 சுற்றுப்புற பள்ளிகள்) படிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் குணநல பயிற்சிகளையும், மற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் படிப்புகளையும் வழங்கவுள்ளது.

புதுச்சேரி நாட்டின் பாதுகாப்பு, ஆன்மிகம் மற்றும் சேவையை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக, ராஷ்ட்ரியா ரக்ஷா யுனிவர்சிட்டி (RRU) மற்றும் ஆரோவில் அறக்கட்டளை இணைந்து “ராஸ்தா என்ற பயிற்சி மையத்தை தொடங்கினர்.
ஆரோவில் – RRU இணைந்து “ராஸ்தா” பாதுகாப்பு பயிற்சி மையம் துவக்கம்
புதுச்சேரி நாட்டின் பாதுகாப்பு, ஆன்மிகம் மற்றும் சேவையை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக, ராஷ்ட்ரியா ரக்ஷா யுனிவர்சிட்டி (RRU) மற்றும் ஆரோவில் அறக்கட்டளை இணைந்து “ராஸ்தா” (RASTA – RRU Auroville Security Training Academy) என்ற பயிற்சி மையத்தை இன்று தொடங்கி வைத்தன.
இந்த தொடக்க விழா விநாயகர் சதுர்த்தி தினத்தில், ஆரோவில் பாரத் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இளைஞர்களுக்கான பாதுகாப்பு கல்வியில் புதிய பாதையை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
15 நாட்களில் உருவான திட்டம்
புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னரின் செயலாளர் டாக்டர். டி. மணிகண்டன், ஐ.ஏ.எஸ்., “ராஸ்தா வெறும் 15 நாட்களில் உருவானது என்பது மிகப்பெரிய சாதனை” எனக் கூறினார்.
“இந்த மையம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும். தற்போது அரசு நிறுவனங்களும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. இதனால் திறமையான பாதுகாப்பு பணியாளர்களுக்கான தேவை நாள்தோறும் அதிகரிக்கிறது. அதேசமயம், பொருளாதார குற்றங்கள், சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், பயிற்சியும் மிகவும் அவசியம். ராஸ்தா இந்த இடைவெளியை நிரப்பும்” என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும், “இந்த முயற்சி உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுவே குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நன்மை பயக்கும்” என வலியுறுத்தினார்.
ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளரும், குஜராத் மாநிலத்தின் கூடுதல் முதன்மைச் செயலாளருமான டாக்டர். ஜயந்தி எஸ். ரவி, ஐ.ஏ.எஸ்., ஆன்லைனில் உரையாற்றினார். “விநாயகர் சதுர்த்தி என்ற புனித நாளில், விநாயகர் தடைகளை நீக்குபவர், ஞானத்தையும் துணிவையும் அளிப்பவர். அதுபோல ராஸ்தா, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, திறன், ஒழுக்கம் ஆகியவற்றை வளர்த்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் ஆற்றலை அளிக்கும்” என்றார்.
அவர் மேலும், “ராஸ்தா மூன்று முக்கிய இலக்குகளை முன்னெடுக்கிறது: வேலைவாய்ப்பு மற்றும் சேவைக்கு உகந்த திறன்கள் – சைபர் பாதுகாப்பு, ட்ரோன் இயக்கம், அவசர நிலை மேலாண்மை, தீயணைப்பு, அடிப்படை இராணுவப் பயிற்சி போன்ற துறைகளில்.
சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல் – மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை, ஒழுக்கம், குழுவாக செயல்படும் திறன் ஆகியவற்றை வளர்ப்பது. ஆரோவில்லின் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் இணைந்த மனித சேவை – ஒற்றுமை, கூட்டுப் பண்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை பாதுகாப்பு கல்வியுடன் இணைப்பது.” அவர் வலியுறுத்தியதாவது: “இது வெறும் பயிற்சி மையம் அல்ல. சேவையின் பாதை – RASTA – எனும் பெயர் பொருந்தும். இளைஞர்கள் திறமை வாய்ந்த குடிமக்களாகவும், நாட்டை பாதுகாக்கும் பொறுப்பான இளைஞர்களாகவும் உருவாக வேண்டும் என்பதே இதன் நோக்கம்.”
பாதுகாப்பின் மனிதநேயம்
சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாஸ்கரன், பாதுகாப்பின் மனிதநேய அர்த்தத்தை எடுத்துரைத்தார். “சிறந்த பாதுகாப்பு அதிகாரி தாயே” என்று அவர் வலியுறுத்தி, குடும்பத்தில் தாயின் பங்கு எப்படி பாதுகாப்பை உருவாக்குகிறதோ, அதேபோல சமூகத்திலும் அந்த உணர்வு வளர வேண்டும் என்றார். அவர் மேலும், இன்றைய டிஜிட்டல் உலகில் சரியான “பயன்பாடு மற்றும் விழிப்புணர்வு” தேவை எனக் கூறி, ராஸ்தா இந்த இடைவெளியை நிரப்பும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆரோவில்லின் தனித்துவக் கண்ணோட்டம்
முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி கோஷி வர்கீஸ், “பாதுகாப்பு” என்பது ஆரோவில்லுக்கு புதிய துறை என்றாலும், காலத்தின் தேவை காரணமாக இதை மேம்படுத்துவது அவசியம்” என்று கூறினார். ராஸ்தா மூலம் இளைஞர்களுக்கு ஒழுக்கம், தேசப்பற்று, தன்னம்பிக்கை ஆகியவை வளர்க்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர். நிரிமா ஓஸா, “இது மிகவும் நல்ல முயற்சி. இந்திய இளைஞர்களுக்கு பாதுகாப்பு கல்வியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த பயிற்சி மையம் இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை அதிகரிக்கும்” எனக் கூறினார்.
எதிர்காலத்திற்கு புதிய பாதை
ராஸ்தா மையம், தொழில்நுட்ப திறன்களை மட்டுமின்றி, மனிதநேயம், ஒழுக்கம், தேசப்பற்று ஆகியவற்றை ஒன்றிணைக்கும் தனித்துவமான முறைமையாக அமைகிறது. இந்த மையம், ஆரோவில்லின் 8 பள்ளிகளில் (4 ஆரோவில் பள்ளிகள், 4 சுற்றுப்புற பள்ளிகள்) படிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் குணநல பயிற்சிகளையும், மற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் படிப்புகளையும் வழங்கவுள்ளது. இது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு, மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய படியாக அமைந்துள்ளது.





















