புதுச்சேரியில் சோகம்! ராட்சத அலையில் சிக்கி 3 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
புதுச்சேரியில் ராட்சத அலை எழும்பி வந்ததில் கடலில் குளித்துக்கொண்டிருந்த 3 பேர் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் ராட்சத அலை எழும்பி வந்ததில் கடலில் குளித்துக்கொண்டிருந்த 3 பேர் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராட்சத அலையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
சுதந்திர தினத்தையொட்டி நேற்று முதல் 3 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலாவுக்கு பலரும் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். புதுச்சேரிக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் பகுதியில் இருந்து சுற்றுலாவுக்கு ஏராளமானோர் வந்துள்ளனர். இதனால் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.
இதைப்போல பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் மேகா (வயது 27) மற்றும் பவன் (25), பிரிட்ஜ்வால் (24), உள்பட சுற்றுலாவுக்கு 12 பேர் புதுச்சேரி வந்தனர். புதுச்சேரி பகுதியை சுற்றி பார்த்தவர்கள் இன்று அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தனர். பிறகு அவர்கள் அங்கு கடலில் இறங்கி குளித்தனர்.
நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளித்தனர். அப்போது ராட்சத அலை எழும்பி வந்ததில் எதிர்பாராதவிதமாக அவர்கள் சிக்கினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். ஆனால் இதில் மேகா, பவன், பிரிட்ஜ்வால் ஆகியோரை பிணமாகவே மீட்க முடிந்தது.
தகவலறிந்த அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது
புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தலைமை செயலகம் எதிரில் செயற்கை மணல் பரப்பில் விளையாடி மகிழ்வதோடு, கடலில் இறங்கி குளிக்கின்றனர். அப்போது, அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரி கடற்கரையில் குளிக்க ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் பெரியக்கடை போலீசார் கடற்கரை பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என, எச்சரிக்கை பலகை வைத்ததோடு, அங்கு போலீசார் நியமிக்கப்பட்டு கடலில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர்.





















