‘தமிழகத்தில் கூடிய மகாராஷ்டிரா பிரமுகர்கள்’ தக்ஷின் திக் விஜய் பெயரில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றனர்..!
’செஞ்சியை கோட்டையையும் அதன் வரலாற்றையும் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்’
சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் மற்றும் மக்கள் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரண்மனை உள்ளிட்ட இடங்களை, தக்ஷின் திக் விஜய் என்ற பெயரில் குழுவாக சென்று பார்வையிட்டனர். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் நடைபெற்ற வரலாற்று விழாவில், செஞ்சிக்கோட்டை வரலாற்றைத் தாங்கிய பெயர் பலகை திறக்கப்பட்டது.
இவ்விழாவில் தமிழ்நாடு கேடர்களாக உள்ள மராத்திய மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அனைவரும் செஞ்சிக்கோட்டை மேல் ஏறி வரலாற்று தடயங்களை கண்டு மகிழ்ந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஏ.பி.பி செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவரும், ஏபி.பி மாஜா தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான ராஜீவ் கண்டேகர் அவரது மனைவியுடன் பங்கேற்றார்.
அவருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பேசிய அவர் வரலாற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமை எனவும் செஞ்சிக்கோட்டையின் வரலாறு அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பது நமது முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செஞ்சி கோட்டை வரலாறு
’இந்தியாவில் உள்ள எவரும் உட்புக முடியாத கோட்டைகளுள் சிறந்தது செஞ்சி கோட்டை’ என மராட்டிய மன்னர் சிவாஜி செஞ்சிக் கோட்டையைப் பற்றி சிலாகித்து சொல்லியுள்ளார். விஜயநகர பேரரசுகளின் கட்டுப்பாட்டிற்கு பிறகு மராத்தியர்களின் ஆளுகைக்குள் வந்த இந்த கோட்டையை பிஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக்கோட்டையை கி.பி 1,677 ஆண்டில் மீட்ட மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப் பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து, இங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டார். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த போதும் 7 வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை.
மராத்திய மன்னனை காப்பாற்றி வைத்திருந்த கோட்டை என்பதற்காகவும் சத்ரபதி சிவாஜியின் ஆளுகைக்குள் இருந்த கோட்டை என்பதாலும் மாராட்டிய மாநிலத்தின் முக்கிய பிரபலங்கள் இங்கு வந்து இந்த கோட்டையை பார்வையிடுவதையும் வரலாற்றை அறிந்துகொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே, தமிழ்நாட்டிலும் மகாராஷ்ட்ராவிலும் முக்கிய பொறுப்புகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பலர் இங்கு வந்து செஞ்சி கோட்டையை பார்வையிட்டு, அதன் வரலாற்றை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து சென்றிருக்கின்றனர்.