விஜய் ரசிகர்கள் ஒரே கூட்டம்தான்; தினமும் பயணம் செய்தால் கூட்டம் வராது- பொன்முடி
வக்பு சட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது எல்லோருடைய நோக்கம். தொடர்ந்து இதற்கு எதிராக தமிழக முதல்வர் குரல் கொடுத்துள்ளார் - பொன்முடி

விழுப்புரம்: விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி என விஜய் பார்க்க சொல்வோர் அனைவரும் ஒரே கூட்டம் தான். விஜய் தொடர்ந்து பயணம் சென்றால் இவ்வளவு கூட்டம் விஜய்க்கு வராது என விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் "அன்புக் கரங்கள்" திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார் ஆகியோர் "அன்புக் கரங்கள்" திட்டம் துவக்கி வைத்து, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவித்தொகை இன்று (15.09.2025) வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எப்போதும் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள் என கூறிப்பிடுவார்கள். அந்தவகையில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள் எந்த வகையிலும் கல்வி பாதித்துவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் இன்றைய தினம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் "அன்புக் கரங்கள்" திட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார்கள். இந்த திட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோர் இருவரால் கைவிடப்பட்ட குழுந்தைகள், இயலாநிலையில் உள்ள ஒற்றைப்பெற்றோர், தீராத வியாதியில் உள்ள ஒற்றை
பெற்றோர், சிறைச்சாலையில் உள்ள ஒற்றைப் பெற்றோர் போன்ற பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000/- வழங்கப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொருத்த வரையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக "அன்புக் கரங்கள்” திட்டம் செயல்படுத்தபடுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 9700 வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து முதற்கட்டமாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள 207 பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், "அன்புக் கரங்கள்" திட்டம் மூலமாக மாதந்தோறும் ரூ.2000/- உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை இன்றைய தினம் 207 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி.
திமுக குறித்து விஜய் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொன்முடி: தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெளிவாக கூறி விட்டார்கள், விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் மதுரையிலும் கலந்து கொண்டார்கள், மதுரையில் கலந்து கொண்டவர்கள் தான் திருச்சியிலும் கலந்து கொண்டார்கள். அதனால்தான் சனிக்கிழமைகளில் நிகழ்ச்சி நடத்துகிறார். தினமும் பயணம் செய்தால் இவ்வளவு கூட்டம் வராது. அடுத்த முதல்வர் மட்டுமல்ல தொடர்ந்து தமிழகத்தை ஆளக்கூடியவர் ஸ்டாலின் தான்.
வக்பு சட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது எல்லோருடைய நோக்கம். தொடர்ந்து இதற்கு எதிராக தமிழக முதல்வர் குரல் கொடுத்துள்ளார். இன்று உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிறுபான்மையினர் அனைவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும். சிறுபான்மையினர் பாதிக்கப்பட கூடாது என்பது தான் முதல்வரின் நோக்கம். அதனால் தான் தொடர்ந்து இந்த சட்டத்தை முதல்வர் எதிர்த்து வருகிறார்.
அதிமுக இப்போது ஒரு கட்சி இல்லை. ஐந்து கட்சியாக உள்ளது. ஐந்து கட்சிகளில் உள்ளவர்கள் சென்று அமித்ஷாவை பார்த்துவிட்டு வருகிறார்கள். அதிமுக பிஜேபியின் கைப்பாவையாக மாறிவிட்டது என்றார்.




















