Pongal 2024: வருகிறது பொங்கல்.....விழுப்புரத்தில் பானை தயாரிக்கும் பணி தீவிரம்..!
Pongal festival 2024: பொங்கல் தொகுப்பு திட்டத்தில் பானை சேர்த்து வழங்க வேண்டும் என அரசிற்கு தொழிலாளர்கள் கோரிக்கை.
பொங்கல் பண்டிகை
விழுப்புரம் (Villupuram): இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றானதும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந் தேதி திங்கள்கிழமை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர். இதற்காக விழுப்புரம் அருகே சாலை அகரம், ராகவன் பேட்டை, அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு, திண்டிவனம், முன்னூர், ஆலங்குப்பம், கிளப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளி மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையினால் மண் பானைகள் தயாரிப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது.
மண்பானைகள் தயாரிப்பு
அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சற்று முன்னதாகவே மண் பானைகள் தயாரிக்கும் பணியை மண்பாண்ட தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வார காலம் உள்ள நிலையில் தற்போது விழுப்புரம் பகுதியில் மண்பானைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகள் வரை வெவ்வேறு அளவுகளில் தயாரித்து வருகின்றனர். இவ்வாறு தயார் செய்யப்பட்ட பானைகளை நன்கு உலர வைத்து பின்னர் சூளைபோட்டு வேக வைக்கின்றனர். இதுபற்றி சாலைஅகரத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழிலை செய்கிறோம். வருடத்தில் கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்துதான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது. சுவையும், ஆரோக்கியமும் தந்த மண்பானை சமையல் தற்போது கிராமங்களில் கூட அரிதாகி வருகிறது.
பொங்கல் தொகுப்பு திட்டத்தில் பானை சேர்த்து வழங்க வேண்டும்
அதுபோல் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடும் கிராம மக்களிடம் குறைந்து வருகிறது. இதனால் இந்த தொழில் நலிவடைந்து வருவதால் அதனை நம்பியிருந்த பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆனால் ஒரு சில கிராம மக்கள் பழமை மாறாமல் மண் பாண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் பொங்கலிடுவதற்கு தேவையான அரிசி, முந்திரி, ஏலக்காய், வெல்லம், பன்னீர் கரும்பு உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. அதேப்போல் பொங்கலிடுவதற்கு முக்கிய தேவையாக உள்ள பானைகளையும் பொங்கல் தொகுப்பு திட்டத்தில் சேர்த்து வழங்க வேண்டும். இதன்மூலம் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்க்கையும் முன்னேறும். எனவே தமிழக அரசு இதனை பரிசீலிக்க வேண்டும் என தொழிலாளர்கள் என்றனர்.