தொடங்கிய வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் தயார் நிலையில் பேரிடர்க்கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்!
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட பொம்மையார் பாளையத்தில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம், பெரியமுதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம், கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் நொச்சிக்குப்பம் மற்றும் கூனிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், ’’தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொம்மையார்பாளையம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்
அதனடிப்படையில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, கடலோரப்பகுதி ஒட்டியமைந்துள்ள வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பேரிடர் காலங்களில் 500 நபர்கள் வரை தங்க இடவசதி உள்ளது.
எனவே, இம்மையத்தில், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, பாதுகாப்பு வசதி, மருத்துவ முதலுதவி வசதி, ஜெனரேட்டர் வசதி, புயல் போன்ற இயற்கை பேரிடர் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் அபாய ஒலி கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக குளோரினேஷன் முறையில் சுத்தம் செய்வதற்கான பொருட்களை பார்வையிட்டதுடன், அவ்வப்பொழுது குளோரினேஷன் செய்த குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெரிய முதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்
மேலும் பேரிடர் காலத்தில், பொதுமக்கள் தொடர்புகொள்ளும் வகையில், அவசர உதவி கைப்பேசி எண்ணினை பொதுஇடங்களில் ஒட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரிய முதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திலும் 500 நபர்கள் வரை தங்குவதற்கான இடவசதி உள்ளது.
இம்மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்காக போர்வை, கொசுவர்த்தி, டார்ச்லைட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அப்பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோட்டக்குப்பம் பேரிடர் கால பல்நோக்கு மையங்களை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நொச்சிக்குப்பம் பேரிடர்க் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்
தொடர்ந்து, மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், புயல் எச்சரிக்கை குறித்து அபாய ஒலி எழுப்பும் கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கூனிமேட்டில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், அவசரகால ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, நல்ல முறையில் இயங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.