புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 5,000 நிவாரணம் - நாராயணசாமி கோரிக்கை
புதுச்சேரி மழை நிவாரணமாக மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
மழை நிவாரணமாக மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: திருப்பதியில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து மாநில வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். ஆனால் அதனை மத்திய உள்துறை மந்திரி கேட்டதாக தெரியவில்லை. என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி கட்சி புதுவையில் ஆட்சிக்கு வந்து 6 மாதம் முடிவடைந்து விட்டது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து புதுவைக்கு நிதி வந்ததா? சுற்றுலாவை வளர்க்க பிரதமர் அதிக நிதி கொடுத்தாரா? உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து தனியாக மனு கொடுக்கிறார். முதலமைச்சருக்கும், உள்துறை அமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? தனித்தனியாக மத்திய உள்துறை மந்திரியிடம் மனு கொடுப்பது புரியாத புதிராக உள்ளது.
புதுச்சேரியில் மழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எந்த பகுதிக்கும் செல்லவில்லை. வீட்டின் அருகில் உள்ள ஊசுடு ஏரியை மட்டும் பார்த்து விட்டு வந்துள்ளார். மழையால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, சர்க்கரை, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ரங்கசாமி அறிவித்தார். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். சிவப்பு ரேஷன் கார்டு வைக்க தகுதி உள்ளவர்கள் பலருக்கு மஞ்சள் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கும் அரசு தலா 5 ஆயிரம் வழங்க வேண்டும். முதலமைச்சர் அறிவித்த பணம் எப்போது கொடுக்கப்படும் என்று மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அறிவிப்போடு இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது.
மத்திய அரசு தற்போது எந்த மாநிலத்திற்கும் நிதி கொடுப்பது இல்லை. மக்களை பற்றி கவலைப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் தற்போது அறிவித்த நிதி எல்லாம் பட்ஜெட்டில் வராதது. இதனை அவர் எவ்வாறு பெறுவார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி பெற 5 ஆண்டுகள் போராடியும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை. புதுச்சேரியில் பல தொழிற்சாலைகளில் இளஞ்சிறார்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதனை புதுவை அரசு கண்டறிந்து அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதம் அடைந்த சாலைகளை அரசு சீரமைக்க வேண்டும் என நாராயணசாமி கூறியுள்ளார்.