நயினார் நாகேந்திரன் - சிவி சண்முகம் சந்திப்பு: சூடுபிடிக்கும் அரசியல் களம் !
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டிவனத்திலுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை அவரது இல்லத்தில் நட்பு ரீதியாக மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார்.

நயினார் நாகேந்திரன் - சிவி சண்முகம் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதும், அதனைத் தொடர்ந்து அவர் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதும் நடந்தது. அதனையடுத்து, செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தனர்.
இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்பாக சென்னை வடபழனியில் நடந்த கூட்டத்தில், கட்சியின் அலுவலகத்தை உடைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா என ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என அழுத்தமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், கட்சியின் அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா என கேள்வி எழுப்பியிருந்தார். இந்தச் சூழலில் இன்று சிவி சண்முகத்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தது பெரும் முக்கியத்துவம் பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வரும் 27ஆம் தேதி ஓமந்தூரில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதிமுக, பாஜக கூட்டணி குறித்தும், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இணைப்பு உள்ளிட்ட முக்கிய அரசியல் சூழல் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.





















