தமிழகத்தையே உலுக்கிய மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் முடிவுக்கு வந்தது - எப்படி தெரியுமா?
சீரமைப்பு பணிகள், கேமரா பொருத்தும் பணிகள் முடிந்ததும் மேல்பாதி கோவிலை திறப்பது குறித்து விரைவில் தேதி அறிவிக்கப்படும் என அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கோட்டாட்சியர் தகவல்

விழுப்புரம்: சீரமைப்பு பணிகள், கேமரா பொருத்தும் பணிகள் முடிந்ததும் மேல்பாதி கோவிலை திறப்பது குறித்து விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில்
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தரப்பினரை வழிபாடு செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி கோவில் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்விசாரணையின்போது அனைத்து தரப்பினரும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாமி தரிசனம் செய்ய செல்பவர்களை தடுத்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
இதனைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 19-ந் தேதி முதல்கட்டமாக விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு தரப்பினர், தங்கள் தரப்பு மக்களிடம் கலந்தாலோசித்து முடிவு தெரிவிப்பதாக கூறியதால் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை 2-ம் கட்டமாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், விக்கிரவாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார், தாசில்தார் கனிமொழி, வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விரைவில் தேதி அறிவிக்கப்படும்
இக்கூட்டத்தில் பங்கேற்ற இரு தரப்பினரும் கோவிலை திறந்து சாமி தரிசனம் செய்வது தொடர்பாக சமாதானமாக செல்வதாக ஒப்புக்கொண்டனர். அதோடு யார், யாரையும் தடை செய்ய மாட்டோம் என்றும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடப்போம் என்றும் உறுதியளித்தனர்.
இதைக்கேட்டறிந்த கோட்டாட்சியர் முருகேசன் கூறும்போது, கோவில் 2 ஆண்டு காலமாக பூட்டிக்கிடப்பதால் அதன் வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி கோவிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சில முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டியுள்ளது. அதுபோல் எதிர்காலத்தில் எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு கருதி கோவில் மற்றும் அதன் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதால் அதற்காக சில நாட்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு கோவிலை திறப்பது குறித்த தேதி அறிவிக்கப்படும். அவ்வாறு தேதி அறிவித்த பின்னர் அந்நாளில் அனைத்து தரப்பினரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

