மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பணியாற்ற தடை கேட்டு ஐகோர்டில் மனுத்தாக்கல்!
மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும், பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறி மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மரக்காணம் ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜூனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தானும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் ஆதரவு பெற்ற தயாளன் என்பவரும் போட்டியிட்ட நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி, தான் 14 ஓட்டுகளும், தயாளன் 12 ஓட்டுகளும் பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
14 வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த தயாளன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மரக்காணம் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனு வாங்கும் நடைமுறையை கூட பின்பற்றாமல், நேரடியாக பழனி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகவும், முறைகேடாக நடத்தப்பட்ட இந்த தேர்தலை பற்றி தேர்தல் முடிந்த மறுநாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் அலைபேசியில் கேட்ட போது, தனது 35 ஆண்டு கால அரசு பணியில் இது போன்ற நிர்பந்தத்திற்கு உள்ளானதில்லை, தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என அவர் மனக்குமுறலை வெளிப்படுத்தியதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்றி பெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும், பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், தேர்தலின் போது பதிவான சிசிடிவி மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை உயர் நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.
தயாளன் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்துவிட்டு, புதிதாக தேர்தல் நடத்தி துணை தலைவரை தேர்வு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்