ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உணவு விநியோகம்
நீர்வரத்து அதிகமானதால் ரயிலில் இருந்தவர்களை மீட்க கடினமானதை அடுத்து ஒரு நாள் முழுமையாக உணவில்லாமல் தவித்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம்: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உணவின்றி சிக்கி கொண்டவர்கள் மீட்கப்பட்டு சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பியவர்களுக்கு, விழுப்புரம் வந்தபோது பயணிகளுக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உணவு தண்ணீர் விநியோகிக்கபட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிக கனமழையின் காரணமாக திருச்செந்தூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள் 800க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு சிக்கி கொண்டனர். கடந்த ஞாயிறுக்கிழமை சிக்கி கொண்டவர்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் 50 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். அதன் பிறகு நீர்வரத்து அதிகமானதால் ரயிலில் இருந்தவர்களை மீட்க கடினமானதை அடுத்து ஒரு நாள் முழுமையாக உணவில்லாமல் தவித்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி கொண்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்கியுள்ளனர். அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் ஹெலிகாப்டர் மூலமாகவும் சிக்கி தவித்த பயணிகளை படிப்படியாக மீட்டனர். தற்போது மீட்கப்பட்ட 509 பயணிகளையும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர் ஐந்து சிறப்பு பேருந்துகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய சிறப்பு ரயிலில் சென்னைக்கு இரவு 1.30 மணி அளவில் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
இந்த சிறப்பு ரயிலானது விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்ததை அடுத்து இவர்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையத்தில் காலை உணவு மற்றும் தண்ணீர் குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. ரயிலில் மீட்கப்பட்டவர்கள் தங்களுக்கு உதவி செய்த கிராம மக்களுக்கு அரசு செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.
தென்மாவட்டங்களில் மழை சேதம்:
மிக்ஜம் புயலால் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட நான்கு வடமாவட்டங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதற்குள் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை கொட்ட் தீர்த்தது. சில பகுதிகளில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும் அதிகமான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பல ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால், ஏராளமான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆபத்தான பகுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பால் தென்மாவட்டங்களில் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்ததோடு, உட்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது. அதேநேரம், மழை நீர் தொடங்கி வெள்ள நீர் வடிய தொடங்கியதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.