திண்டிவனத்தில் திமிங்கில வாந்தியை விற்க முயன்ற 5 பேர் கைது
திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் வாந்தி (அம்பர்கிரிஸ்) விற்க முயன்ற ஐந்து பேர் கைது: பல லட்சம் ருபாய் மதிப்பிலான 16.1/2கிலோ திமிங்கல அம்பர்கிரிஸ் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முருங்கப்பாக்கம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் திமிங்கலத்தின் கழிவுகளை பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா, சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் மற்றும் போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகனரங்கன் (62) என்பவரின் வீட்டில் திமிங்கலத்தின் கழிவு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இ்ந்த நிலையில் மோகனரங்கன் வீட்டுக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் 2 பைகளில் ஏதோ பொருட்களை எடுத்து சென்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் சுமார் 10.25 கிலோ எடையுள்ள தேன் நிறத்தில் 2 கட்டிகள், 4.5 கிலோ எடையளவில் கருப்பு நிறத்தில் பிசின் போன்று 3 அம்பர் கிரிசுகள் என மொத்தம் 14.75 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கழிவுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்து வெளியேறும் ஒருவகை கழிவுபொருளான அம்பர் கிரிஸ்.
இது வாசனை மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்றும் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து மோகனரங்கன் உள்பட 5 பேரையும் போலீசார் பிடித்து ரோஷணை போலீஸ் நிலையத்தின் மாடிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் சந்திரசேகர் (33), உத்ராபதி மகன் லட்சுமிபதி (33), பொளம்பாக்கத்தை அடுத்த மலுவை கரணை பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் முருகன் (32), திண்டிவனத்தை அடுத்த ஆலகிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி மகன் சத்தியமூர்த்தி (34) என்பதும், மோகனரங்கன் வீ்ட்டில் இருந்து திமிங்கலத்தின் கழிவு பொருட்களை கடத்தி செல்ல முயன்ற போது பிடிபட்டதும் தெரியவந்தது.
விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேருக்கும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்தனர். அதை சாப்பிட்டு விட்டு பால்கனியில் கைகழுவுவதற்கு சென்ற மோகனரங்கன் போலீசாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடது கண்புருவம், கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் துடித்தார். உடனே அவரை ரோசணை போலீசார், மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மோகனரங்கனை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமிங்கலத்தின் கழிவுபொருள் வனத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் பிடிபட்ட 4 பேரையும் அவர்களிடம் இருந்த திமிங்கலத்தின் கழிவு பொருட்களையும் வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து 4 பேரிடமும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.