காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் அளவுக்கு அதிகமா நிலக்கரி இறக்குமதி - பொதுமக்கள் சாலை மறியல்
காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் அளவுக்கு அதிகமா நிலக்கரி இறக்குமதி- நிலக்கரி துகளால் பொதுமக்கள் அவதி
புதுச்சேரி: காரைக்கால் மேலவாஞ்சூர் அருகே தனியார் கப்பல் துறைமுகம் இயங்கி வருகிறது. இத்துறை முகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்கப்பட்டதால், சுற்றியுள்ள வடக்கு வாஞ்சூர், மேல வாஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதால், நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டது. இந்நிலையில் துறைமுக நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேறு ஒருவர் கைக்கு மாறியதால், மீண்டும் நிலக்கரி அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் நிலக்கரியில் இருந்து வெளியாகும் துகள்கள், சுற்றியுள்ள கிராமங்களில் 24 மணி நேரமும் படிவதால், கிராம மக்கள் உணவு, உடைகளில் அளவுக்கு அதிகமாக படிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமல், மூச்சு விட முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் அதிகமாக நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் துறைமுக நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும், அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் நிலக்கரியை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட மக்கள், இன்று துறைமுக வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்கால் திருப்பட்டினம் போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அல்லது அதற்கு இணையான அதிகாரிகள் வந்து முறையான தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே முற்றுகையை கைவிடுவோம் என கிராம மக்கள் முற்றுகையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் காரைக்கால் -நாகப்பட்டினம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்