எல்லீஸ்சத்திரம் அணை நீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி! 15 ஏரிகளுக்கு தண்ணீர், விளைநிலங்கள் செழிக்கும்!
விழுப்புரம் : எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து ஏரி பாசனத்திற்காக 3 வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

விழுப்புரம் : எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து ஏரி பாசனத்திற்காக 3 வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு
விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம்- கப்பூர் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 1949-50-ம் ஆண்டில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் உள்ள வலதுபுற பிரதான கால்வாயான எரளூர், ரெட்டி ஆகிய 2 வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுறத்தில் உள்ள ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய 3 வாய்க்கால்கள் மூலம் 15 ஏரிகளுக்கும் தண்ணீர் சென்று அதன் மூலமாக மொத்தம் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணைக்கட்டு உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து ரூ.86 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு புதியதாக அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணைக்கட்டை கட்டி முடித்த சில வாரங்களிலேயே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த தொடர் கனமழையினால் அணைக்கட்டுக்கு நீர்வரத்து வந்தது.
பெஞ்சல் புயல் பாதிப்பு
அப்போது அணைக்கட்டின் வலதுபுறமுள்ள ரெட்டி வாய்க்கால், எரளூர் வாய்க்கால் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு கரைகள் சேதமடைந்தது. எனவே அணைக்கட்டின் கரைகளை பலப்படுத்த அதன் இருபுறத்திலும் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஆனதால் ரெட்டி வாய்க்கால், எரளூர் வாய்க்கால் கரைப்பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய பெஞ்ஜல் புயல் காரணமாக அதிகனமழை பெய்தது. இந்த மழையினாலும், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீராலும் வரலாறு காணாத அளவில் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் இருபுறமுள்ள வாய்க்கால் பகுதிகளில் உள்ள கரைகள், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும், விவசாய விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அணைக்கட்டின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
கான்கிரீட் தடுப்புச்சுவர்
எனவே மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பட்சத்தில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் கரையோரத்தில் இருக்கும் குடியிருப்புகள் பாதிக்காமல் இருக்கும் வகையிலும், அணைக்கட்டு சேதமடையாமல் இருக்கும் வகையிலும் அணைக்கட்டின் கரைகளை பலப்படுத்த அதன் இருபுறத்திலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் அணைக்கட்டின் இடதுபுறம் 550 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.10 கோடியும், அணைக்கட்டின் வலதுபுறம் 250 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.8 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. இதில் வலதுபுறமுள்ள எரளூர், ரெட்டி வாய்க்கால்கள் செல்லக்கூடிய பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் முடிந்ததை தொடர்ந்து, அணைக்கட்டில் இருந்து அந்த வாக்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஏரிகள் வறண்டன
ஆனால் அணைக்கட்டின் இடதுபுறமுள்ள ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய வாய்க்கால்கள் செல்லக்கூடிய பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடந்தது. இதனால் அந்த வாய்க்கால்களில் தண்ணீரை திறந்து விட முடியவில்லை. இதன் காரணமாக இந்த அணைக்கட்டு நீரை நம்பியுள்ள பிடாகம், கொளத்தூர், வழுதரெட்டி, கண்டமானடி, சாலாமேடு ஏரி, பொன்னேரி, காவணிப்பாக்கம், பானாம்பட்டு, ஆனாங்கூர், சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், சிறுவந்தாடு, வளவனூர், நன்னாட்டாம்பாளையம், ராமையன்பாளையம் ஆகிய 15 ஏரிகளுக்கும் நீர் வரத்து இல்லாமல் வறண்டன.
இதனால் இந்த ஏரி நீரையே நம்பியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசனம் இல்லாமல் பாதிக்கப்பட்டது. இதனால் கவலையடைந்த விவசாயிகள், அணைக்கட்டில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து வாய்க்கால்களில் தண்ணீரை திறந்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
தண்ணீர் திறப்பு
இதையடுத்து அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ஓரிரு நாட்கள் முன்பு முடிவடைந்தது.
இநநிலையில் நேற்று எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து ஏரி பாசனத்திற்காக ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய வாய்க்கால்களில் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேற்கண்ட 15 ஏரிகளுக்கும் நீர்வரத்து செல்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




















