பொறுத்திருந்து பாருங்க ; ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை- எடப்பாடி பழனிசாமி அதிரடி
ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் பல கட்சியினர் வந்து எங்களுடன் சேரும்போது நடுங்கி போவீர் !

கள்ளக்குறிச்சி: டாஸ்மாக் ஊழலில் குடும்ப உறுப்பினரை காப்பாற்றவே முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் அதிமுக சார்பில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையோடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். சுமார் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு. அதேபோல் பல்வேறு சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள், குடிமராமத்து திட்டத்தில் பல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த ஏரி, குளம், குட்டை அத்தனையும் விவசாயிகளின் பங்களிப்போடு தூர் வாரினோம்.
மழைக்காலத்தில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்தது. விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைத்தது. குடிப்பதற்கு தேவையான நீரை ஏற்படுத்திக் கொடுத்தோம். இப்படி ஏதாவது ஒரு திட்டத்தை திமுக செயல் படுத்தி இருக்கிறதா? இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்றுமே கிடையாது. போட்டோ சூட் தான் நடக்கிறது. அழகா வருவார் போட்டோ எடுப்பார். அதோட அன்றைய தினம் முடிந்து விட்டது. நிறைய இருக்கிறது. ஒன்றா இரண்டா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்கு திட்டமிட்டுச் செயல்படுகின்ற அரசாங்கம் தான் நல்ல அரசாங்கம். அப்படி செயல்பட்டது அதிமுக தான். அதனால் தான் மக்கள் அதிமுகவை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் மன்னராட்சி, வாரிசு அரசியல் நடக்கிறது!
தமிழகத்தில் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவர். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கியது. தமிழகத்தில் மன்னராட்சி, வாரிசு அரசியல் நடக்கிறது. அ.தி.மு.க., இருக்கும் வரை அவர்களின் கனவு நிறைவேறாது. வாரிசு அரசியலுக்கு வரும் சட்டசபை தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.
தேர்தலில், தி.மு.க 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். முதல்வராக அவர் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் சிந்தித்து செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தபின், தி.மு.க., முடக்கி வைத்த மக்கள் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். அனைத்து துறைகளிலும் தி.மு.க.,வினர் ஊழல் செய்து கோடி கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.,வாகும்.
எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்!
டாஸ்மாக் ஊழலுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடை ஆணை நீக்கப்பட்டால் பல பேர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே பாதுகாப்பாக வைக்கப்படுவர். அ.தி.மு.க., எப்படி பா.ஜ., உடன் கூட்டணி வைக்கலாம் என ஸ்டாலின் கேட்கிறார். இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். உங்களுக்கு ஏன் பயம். தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்தது என்கிறார். ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் பல கட்சியினர் வந்து எங்களுடன் சேரும் போது நடுங்கி போவீர்.
தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போதையால் சீரழிந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி செல்லாத ஸ்டாலின், தற்போது டாஸ்மாக் ஊழலால் குடும்ப உறுப்பினருக்கு பாதிப்பு வந்து விடும் என்ற அச்சத்தில் பங்கேற்றுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலரும். இவ்வாறு அவர் பேசினார்.





















