தமிழக பெண்களுக்கு தேவை மரியாதை... விளம்பரம் அல்ல..! எடப்பாடி பழனிசாமி
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பெண்கள் கைவிடப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கிராம பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் - எடப்பாடி பழனிச்சாமி

தமிழக பெண்களுக்கு தேவை மரியாதை தான், விளம்பரம் அல்ல என தனியார் நாளிதழ் அளித்த பேட்டியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு தலைமை பண்புகள் அதிகரித்து வரும் காலம் இது !
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது., தமிழகத்துப் பெண்கள் எப்போதும் தலைமை தாங்குபவர்கள். அது வீடாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் பணியிடமாக இருந்தாலும் சரி. பொதுவாழ்விலும் கூட பெண்களின் தலைமைப் பண்புகள் அதிகரித்து வரும் காலம் இது. பின்னடைவுகளை சந்தித்து சவால்களை எதிர்கொள்ளும் திறன் பெண்களுக்கு அதிகம் என்றாலும், அரசுத் திட்டங்கள் பெண்களின் அந்த நெகிழ்வுத் தன்மையைக் குறைக்கின்றன. அதிலும் இங்கே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திட்டங்களில் பொருளை விட காட்சியே முதன்மையாக இருக்கிறது. கையில் கிடைக்கக்கூடியதற்குப் பதிலாக காட்சியாக அதை விளம்பரப்படுத்துவதே முக்கியத்துவம் தரப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக பெண்களை முதன்மைப்படுத்தி அவர்களை மையப்படுத்தி நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் காகித அளவில் தலைப்புச் செய்திகளாக பெரிய அளவில் இடம்பிடித்தன. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், அந்த வாக்குறுதிகள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் முழுமையான அளவில் சென்று சேரவில்லை. வேகம் எடுக்கவில்லை. தாமதங்கள், தவிர்க்கப்படுதல், ஆளும் வர்க்கத்தின் சாலைத் தடைகள் எல்லாம் அந்த திட்டங்களின் விளைவுகளை நீர்த்துப் போக வைக்கின்றன.
ஒரு கோடி பெண்கள் கைவிடப்பட்டனர் ?
குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித் தொகைத் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட திட்டம் இது. இதற்காக ஏறத்தாழ 2.06 கோடி பெண்கள் மனு செய்திருந்தார்கள். ஆனால், மார்ச் 2024இல் வெறும் 1.06 கோடி மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆக, கிட்டத்தட்ட ஒரு கோடி பெண்கள் இந்த திட்டத்தினால் கைவிடப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கிராம பின்புலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஒரு கோடி வரையிலான பெண்கள் நீக்கப்பட்டதும் கூட தேவை கருதி இல்லை. கெடுபிடியான விதிமுறைகள், ஆவணப்படுத்துதல் தொடர்பான விதிமுறைகள், நிர்வாகத் தடைகள் காரணமாக இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள். திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த திட்டத்துக்காக பெண்கள் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்தார்கள். கடைசியில், குடும்ப அட்டை குளறுபடிகள், நில ஆவணங்கள் சரியில்லை என்று கூறி இவர்களில் பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். 9.24 லட்சம் பெண்கள் இந்த நீக்கத்துக்கு எதிராக மீண்டும் விண்ணப்பத்திருக்கிறார்கள். அந்த பெண்கள் அடைந்த பதற்றம், வேதனை, அவர்களது எதிர்பார்ப்புகள் வீணானதை பற்றி பக்கம் பக்கமாக பேச முடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டட 9.24 லட்சம் பெண்கள் மீண்டும் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளி வந்தது. இதற்கிடையே இந்த திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள்படி பணம் வழங்குவதில் கூட குறிப்பிடத்தக்க தாமதங்கள், குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இந்த குளறுபடிகள் நடந்துள்ளன. கண்ணியமான ஆதரவு, உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதிப்பாடு ஆகியவற்றை இது குறைமதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. பொருளாதார சுமையைத் தளர்த்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற முன்முயற்சிகளை பொதுப் போக்குவரத்து முன் எடுத்தது. ஆனால் அது வெறுமனே காகித அளவில்தான் இருக்கிறது.
தொடர்ச்சிக்கும் புதுமைக்கும் இடையிலான மோதல் !
தமிழகத்தில் இரண்டாவது அடுக்கு நகரங்கள், மூன்றாவது அடுக்கு நகரங்களில் வாழும் பேருந்து பயணிகள் கூட்டநெரிசல், நிரம்பி வழியும் பேருந்துகளில் ஏறிஇறங்க வேண்டியிருக்கிறது. பேருந்து சேவைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைந்திருக்கின்றன. பெண் நடத்துநர்கள் குறைந்திருக்கிறார்கள். இதனால் இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த முயற்சியின் விளைவுகளும் குறைந்திருக்கின்றன. தொடர்ச்சிக்கும் புதுமைக்குக்கும் இடையிலான மோதல் தொடர்பான கேள்வியும் இருக்கிறது. தாய் மற்றும் சேய்களின் நலத்துக்காக அம்மா பேபி கேர் கிட் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தொடர்கிறது.
ஆனால் திட்டத்தை விரிவாக்கவோ அதை நவீனப்படுத்தவோ, அதில் புதுமையை புகுத்தவோ இல்லை. அதுபோல பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு மானியம் வழங்குவதிலும் சரி, கடனுதவி வழங்குவதிலும் சரி.அண்மை காலமாக நிதிகுறைக்கும் செயல்பாடு நடக்கிறது. இதனால் அடிமட்ட அளவில் தொழில் முனையும் முயற்சிக்கான சூழல் சுருங்கி வருகிறது. அதற்கான சூழல் மாற்றப்பட்டிருக்கிறது. கொள்கைத் திட்டங்களுக்கும் அதை நிறைவேற்றுவதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திட்டங்கள் அறிவிக்கப்படும்போது பெரிதாக அடிக்கடி அவை கொண்டாடப்படுகின்றன. விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை முறையாகப் பின்பற்றினால்தான் மக்களன் வாழ்வு உண்மையில் மாறும்.
சேலம், தருமபுரி, மதுரை போன்ற மாவட்டங்களில் ஒருகாலத்தில் பெண் சிசு கொலை அதிகமாக இருந்தது. இதை தடுக்கும் நோக்கத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் 1990களில் கொண்டுவரப்பட்டது. பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் மனிதாபிமான நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம் இது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டபின், தமிழ்நாடு சமூகநலத்துறை எடுத்த கணக்கெடுப்பின்படி 1992ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையில் பெண் சிசுக்கொலை 75 சதவிகிதம் குறைந்திருந்தது. அதுபோல முன்னோடித் திட்டமாக, மகளிருக்குப் பாதுகாப்பு, நீதி அளிக்கும் நோக்கில் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
2021இல் மாநிலம் முழுவதும் 222 மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டன. நிர்வாக ரீதியான புதுமை கலந்து உருவாக்கப்பட்டு அனுதாபம் கலந்த நோக்கத்துடன் வழிநடத்தப்பட்ட ஒரு திட்டம். ஒரு புதிய ஏற்பாடு இது. உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது வரலாற்றில் இன்னொரு மைல்கல் மாதிரியான சீர்திருத்தம். இதன்மூலம் பெண்கள் வெறும் வாக்காளர்கள், பயனாளர்களாக இல்லாமல், பல்வேறு இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர்களாக, மாமன்ற உறுப்பினர்களாக, வார்டு உறுப்பினர்களாக உருவெடுத்தனர். நிதிநிலை அறிக்கை, முக்கிய முடிவுகள், வருங்காலம் குறித்து பெண்கள் முடிவெடுத்தனர்.
தாலிக்கு தங்கம் திட்டம்
சமூகத்தின் பின்தங்கிய அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அதிக அதிகாரமளிக்கும் நலத்திட்டங்களில் ஒன்றுதான் தாலிக்குத் தங்கம். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்களது திருமணத்தின்போது தங்கம் மற்றும் நிதி வழங்கும் திட்டம் இது.உயர்பள்ளிப் படிப்பை முடித்த இளம்பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் திருமண உதவியாக வழங்கப்பட்டன. பட்டதாரி பெண்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திருமணத்தையும் தாண்டி அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமும் பார்வையும் மேலும் விரிந்தது.அம்மா இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு புதிய சுதந்திரத்தை வழங்கியது.
பெண் குழந்தைகள் பாதியில் பள்ளிப்படிப்பை கைவிடுவது குறைந்தது. கல்வியை நோக்கி மாணவிகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணப்பட இலவச சைக்கிள் திட்டம் வழிவகுத்தது. உழைக்கும் பெண்களின் மதிப்பையும் கௌரவத்தையும் அன்றாடம் பாதுகாக்கும் வண்ணம் அம்மா உணவக திட்டம், அடிப்படையான வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை வழங்கும் திட்டம் போன்றவை செயல்பட்டன. வெறும் கையேடுகள் மாதிரியான திட்டங்கள் அல்ல அவை. எண்ண முடியாத அளவுக்கு பல்வேறு குடும்பங்களில் பெண்களுக்கு பாதுகாப்பும், ஆறுதலும் அளிக்கும் பல திட்டங்கள் இருந்தன.
உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெறும் வெற்று முழக்கங்கள் தேவையில்லை. அவர்களுக்குத் திட்டங்கள்தான் தேவை. அவர்களுக்கு சிறுதொகை தேவையில்லை. அவர்களுக்குத் தேவை மரியாதை. தமிழக பெண்களுக்கு அடையாள அரசியலுக்கும், நேர்மையான அரசாட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு நன்றாகத் தெரியும். பொதுவாக எத்தனை திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்பதை வைத்து வெற்றியை அளவிட முடியாது. எத்தனைப் பேர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்தது? எத்தனைப் பேர் கைதூக்கிவிடப்பட்டனர் என்பதை வைத்துதான் திட்டங்களின் வெற்றியை அளவிட முடியும்.அதிகாரம் வழங்குவது என்பது வெறும் தலைப்புச் செய்திகள் அல்ல.
பெண்களுக்கு தேவை மரியாதை !
குழந்தைள் நலத்துடன் இருப்பதும், தெருக்களில் பாதுகாப்பாக இருப்பதும், பெண்கள் நம்பிக்கையுடன் அதிகாரத்தை ஏற்பதும்தான் ஒரு திட்டத்தின் வெற்றிக்கான ஆதாரங்கள். சிறுமிகள் பயத்துக்குப் பதிலாக உயர்ந்த ஒரு லட்சிய நோக்கத்துடன் வளர்வதுதான் திட்டங்களின் வெற்றியை வெளிப்படுத்தும் உயரிய ஆதாரம். தமிழகம் முன்னோக்கிப் பார்க்கிறது. உரையாடல், கருத்தாடல்களில் மாற்றம் காணப்பட வேண்டும். வெறும் முழக்கங்கள்,கோஷங்கள், புள்ளி விவரங்கள் இவற்றை எல்லாம் தாண்டி பெண்கள் வேறு ஒன்றை தேடுகிறார்கள். வேலை செய்வதற்கான அமைப்பை ஒரு முறையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெற்றிகரமாக சென்று இலக்கை அடையும் சேவையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். என்றும் இருக்கக்கூடிய மரியாதையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தேடுகிறார்கள். வேறு எதையும் அவர்கள் தேடவில்லை.நலன்கள், நலத்திட்டங்கள் இருக்கிறதா என்பதல்ல கேள்வி. நலத்திட்டங்கள் சாதனையை நிகழ்த்துகின்றனவா மாற்றத்தைக் கொண்டு வருகின்றனவா என்பதுதான் கேள்வி என தெரிவித்தார்.





















