'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
உதவி ஆய்வாளர் மருது என்பவர் என் மகளை தனி அறையில் வைத்து உன்னையும் உன் அம்மா அப்பா 3 பேர் மீதும் திருட்டு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்,நீ அனந்தபுரம் இஸ்கூல்கே படிக்க வரமாட்டேன்னு மிரட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்அருங்குணம் கிராமத்தை சேர்ந்த மணிமேகலை என்பவர் தனது மகளை தற்கொலைக்கு துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் மணிமேகலை தெரிவித்ததாவது,
"எனது இளைய மகள் அனுசுயா வயது 16. அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் சுதா என்பவர் மகளிர் குழுதலைவியாக உள்ள நிலையில் அந்த குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். நான் மாதந்தோறும் பணம் செலுத்தும் புக் தலைவி வைத்திருந்ததால் நான் பலமுறை கேட்டு வந்தபோது கொடுக்காததால் 26/11/2024 அன்று இரவு சுமார் 7.30 மணிக்கு வேணுகோபால் என்பவர் அங்கு பால் வாங்கி விற்பனை செய்து வருகிறார். நான் என் மகளை பால் வாங்கிக்கொண்டு மகளிர் புக்கை வாங்கி வா என்று சொல்லி அனுப்பிவைத்தேன். என் மகள் சுதா வீட்டிற்கு சென்று அக்கா, அக்கா என்று கூப்பிட்டுக்கொண்டு விட்டு உள்ளே சென்று உள்ளார்.
அப்போது சுதாவின் கணவர் ஐய்யனார் பின்பக்கத்திலிருந்து வந்து மிகவும் இழிவாக தகாத வார்த்தையால் திட்டி, என்னடி வீட்டுள்ளே வந்து நகை திருடிபோரியா என்று சொல்லி கையைப்பிடித்து இழுத்து இடுப்பில் கையைவைத்து தகாத முறையில் நடந்து சுவரின் மீது தள்ளி, கீழே விழுந்த என்னை முடியை பிடித்து தூக்கி கையை பின்பக்கம் முறுக்கி பிடித்துக்கொண்டு ஐய்யனார் மனைவியை கூப்பிட்ட உடனே அங்கிருந்த சம்பத், ராஜகோபால், சுதா ஆகியோர் கும்பலாக சேர்ந்து என் மகளை அடித்து நகையை நீதான் வந்து திருடி சென்றாயா? திருட்டு நாயே என்று சொல்லி அடித்தார்கள்.
எனக்கு தகவல் தெரிந்து ஓடி சென்று பார்த்தபோது, மேலே கண்ட எதிரிகள் சுற்றி நின்று என் மகளை மிரட்டி அடித்தார்கள். நான் தடுத்து வீட்டிற்க்கு அழைத்து வந்து என் மகள் அழுவதை சமாதானம் செய்து தூங்கவைத்துவிட்டு மறுநாள் காலை 27/11/2024 அன்று அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரை காவல் உதவி ஆய்வாளர் வாங்க மறுத்துவிட்டு. காவல் உதவி ஆய்வாளர் மருது என்பவர் உங்கள் மீதும் உங்கள் மகள் மீதும் நகை 4 சவரன் திருடிவிட்டதாக புகார் உள்ளது ஒழுங்காக மாலை 3 மணிக்கு விசாரணைக்கு வர சொன்னார்கள். நானும் என் மகள் அனுசுயா என் கணவர் ஆகியோர் சென்றோம்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் மருது என்பவர் என் மகளை தனி அறையில் வைத்து "ஏய் திருட்டு நாயே ஒழுங்கா திருடியதை ஒத்துக்கோ இல்லையென்றால் உன்னையும் உன் அம்மா அப்பா மூன்று பேர் மீதும் திருட்டு கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன். நீ அனந்தபுரம் இஸ்கூல்கே படிக்க வர மாட்டேன்"னு மிரட்டிவிட்டு வந்து என்னை பார்த்து ஏய் "என்னடி நீயும் உன் மகளும் நகை திருடிவிட்டு மறைக்கிரிங்களா என்னையும் மிரட்டிவிட்டு நாளை காலையில் நகை எடுத்து வந்து கொடுக்கல உங்கள் ஒழிசிடுவேணு" மிரட்டி எங்களை அனுப்பி வைத்தார்.
தற்கொலை முயற்சி:
நானும் என் மகளும் வீட்டிற்கு வந்து இரவு முழுக்க அழுதுகொண்டு இருந்தோம் அந்த பயத்தினாலும் என் மகள் எந்த நகையும் திருடவில்லை என்று அழுது புலம்பிக்கொண்டு சாப்பிடாமல் படுத்துக்கொண்டார் நாங்களும் மன உளைச்சலில் படுத்துவிட்டோம் 27/11/2024 அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு என் மகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு எங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள தூக்கு கயிற்றில் தொங்கினார்.
சத்தம் கேட்டு எழுந்து பார்த்து அலறி ஓடிப்போய் தூக்கி கயிற்றை அறுத்து கிழே இறக்கி 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப் பட்டு அதன் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பிறகு இறந்துவிட்டதாக நாங்கள் நினைத்த உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்தோம். பிறகு இரண்டு நாள் கழித்து தான் என் மகள் கண்விழித்தார். நான் என் மகளுடனிருந்து வருகிறேன் எனவே என் மகள் அனுசியா தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்படி எனது மகள் அனுசியா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.