காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகா: நெய்வேலி மின்சாரத்தை வழங்கக் கூடாது- விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
Cauvery Water: தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் மத்தியஅரசை கண்டித்து விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...
காவிரி நீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையைத்தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக நூறுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி உரிமையை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூறுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக முதலமைச்சரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர்களை கர்நாடக அரசு கைது செய்ய வேண்டுமெனவும், மத்திய தமிழகத்தின் உரிமையை தர வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை வழங்க கூடாதென வலியுறுத்தினர்.
தண்ணீர் திறக்க உத்தரவு:
தமிழக அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்காமல் அவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் தற்போது 50 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
இரு தரப்பு அதிகாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் இறுதியாக தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, காவிரியில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது வரும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை திறக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.