புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 28, 2025 முதல் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, 'ஏஎஸ்டி' (Absent/Shifted/Dead) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 28, 2025 முதல் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, 'ஏஎஸ்டி' (Absent/Shifted/Dead) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 28.10.2025 முதல் வரை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 04.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Forms) வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்றனர்.
இப்பணி கடந்த 11.12.2025 அன்றுடன் முடிவடைந்தது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வின்போது சில வாக்காளர்களின் வீடுகள் பூட்டப் பட்டிருந்ததாலும், சிலர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த காரணத்தினாலும், மேலும், சில வாக்காளர்கள் மரணம் அடைந்த காரணத்தினாலும் அவ்வாக்களர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மரணம் அடைந்த வாக்காளர்கள், குடிபெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் இல்லாத வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய ASD (Absent/ Shifted / Dead) பட்டியல் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கும் (BLA) இப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதள முகவரியில் https://puducherry-dt.gov.in . SIR-BLO&BLA-MOM (Link) மேற்கூறிய இத்தகைய பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் பெயர்கள் வருகின்ற 16.12.2025 அன்று வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது எனினும், தகுதியுடை எந்த ஒரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருக்கவும், தகுதியற்ற வாக்காளர்களின் பெயரை நீக்கும் பொருட்டு அரசியல் கட்சிகள் முன்னதாகவே இந்த வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்துக் கருத்து தெரிவிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 16.12.2025 முதல் 15.01.2026 வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இந்த காலகட்டத்தில் மேற்கூறிய காரணங்களால் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவர்கள் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது





















