(Source: ECI/ABP News/ABP Majha)
தங்கநகை, பணம், ஆதார் கார்டை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம்... திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம் பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 28,760 ரூபாய் பணம் பறிமுதல்.
விழுப்புரம் : திண்டிவனம் பத்திர பதிவு அலுவலகம் எண் 1ல் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 760 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.இதில் சார் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் வகுவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்த நிலையில் மதியம் 3.30 திருவண்ணாமலை விஜிலென்ஸ் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளர் ஈஸ்வரி, உதவி ஆய்வாளர் கோபிநாத் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஒலக்கூர் பி.டி.ஒ சரவணகுமார் முன்னிலையில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவர்களை கண்டவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் கையில் வைத்திருந்த பணம் நகை மற்றும் பேங்க் பாஸ்புக் ஆதார் கார்டு ஆகியவையை ஜன்னல் வழியாக வீசி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் கணக்கில் வராத 2.5 லட்சத்திற்கும் மேலான பணம் மற்றும் அங்கிருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.
மேலும் அருகே உள்ள ஆவண எழுத்தாளர் அலுவலகத்திலும் சோதனை செய்தனர். இதுவரையில் யாரையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் உரிய ஆவணங்கள் இருப்பவர்களுகளுக்கு பணத்தை திருப்பி கொடுத்த டி.எஸ்.பி ஜன்னல் வழியே பணத்தை வெளியில் வீசிய அண்ணம்புதூர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது நிலம் வாங்க பணம் கொண்டு வந்த தாகவும் மீதி பணத்தை சார் பதிவாளர் முன்னிலையில் நில விற்பனையாளரிடம் வழங்க வைத்திருந்த தாகவும் திடீர் சோதனையால் பணத்தை வெளியில் விசியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பணம் கொண்டு வரக்கூடாது எனவும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவணங்களை சமர்ப்பித்து பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினர். இதன் மூலம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 760 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.