அமமுக பிரமுகர் ஏமாற்றியதாக இளம்பெண் தற்கொலை - உடலுடன் உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு
விழுப்புரம் அருகே இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அமமுக பிரமுகரை கைது செய்யகோரி மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் அமமுக பேரூராட்சி உறுப்பினர் இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை நெருக்கமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் இளம்பெண் மனமுடைந்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க கோரி இறந்த பெண்ணின் உடலை வைத்து கொண்டு விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள சுந்தரிபாளையம் கிராமத்தை சார்ந்த முருகன் என்பவரின் மகள் முத்துலட்சுமி. இவரை, அதே பகுதியை சார்ந்த அமமுக நிர்வாகியும் வளவனூர் பேரூராட்சியின் 11 வது வார்டு உறுப்பினரான கந்தன் என்பவர் கோலியனூரில் வாடகை பாத்திர கடையில் கணக்கு வழக்கு பார்ப்பதற்காக பணிக்கு சேர்த்து வைத்துள்ளனர். இங்கு பணி செய்த முத்துலட்சுமியிடம் கந்தன் ஆசை வார்த்தை கூறி பலமுறை நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே முத்துலட்சுமியை கண்டித்து பணி செல்வதை நிறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து சென்னைக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நர்சிங் படிக்க வைக்க அனுப்பியுள்ளனர்.
சென்னையில் நர்சிங் படித்து கொண்டிருந்த முத்துலெட்சுமியிடம் இரண்டு மாதங்களுக்கு முன் கந்தன் போனில் தொடர்பு கொண்டு, ’நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என பேசி அடிக்கடி சினிமா தியேட்டர், ஷாப்பிங் மாலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமடையவே, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கந்தனிடம் கேட்டுள்ளார். அதற்கு கந்தன் மறுப்பு தெரிவிக்கவே கடந்த 28 ஆம் தேதி முத்துலெட்சுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே இளம்பெண்ணின் உறவினர்கள் கந்தன் மீது நடவடிக்கை எடுக்ககோரி முத்துலெட்சுமியின் உடலை வளவனூர் நான்கு முனை சந்திப்பில் வைத்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே போலீசார் மறியலை கைவிட்டு செல்லுமாறு வலியுறுத்தினார். இருப்பினும் மறியலை கைவிடாததால் விழுப்புரம் எஸ்.பி சசாங் சாய் நேரில் வந்து உடலுடன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர்.
சாலை மறியல் போராட்டம் காரணமாக விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இச்சம்பவம் தொடர்பாக வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண்னை ஏமாற்றிய கந்தனுக்கு முத்துலெட்சுமி இறந்த செய்தி தெரியவரவே கந்தன் விஷம் அருந்துவிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கந்தன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.